×

அழகர்கோயில் பகுதியில் வெண்டை விளைச்சல் ஜோர்

*விவசாயிகள் உற்சாகம்

மதுரை : அழகர்கோயில் சுற்றுப்பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அழகர்கோவில் சுற்று வட்டார பகுதி என்பது, அதிக அளவில் விவசாயம் நிறைந்ததாக உள்ளது. இப்பதிகளில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

மேலும் கடலை, வெண்டை உள்ளிட்டவற்றையும் அதிகம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அழகர்கோயில் பகுதியில் உள்ள தொப்புலாம்பட்டி, ஆமத்தூர்பட்டி, அப்பன் திருப்பதி, மாங்குளம், சின்ன மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தற்போது வெண்டைச்செடிகளை பயிரிடுள்ளனர்.

இப்பகுதிகளில் விளையும் வெண்டைக்காய் சுவையாக இருக்கும் என்பதால், மொத்த வியாபாரிகள் இங்கு நேரடியாக வந்து அதிக அளவில் கொள்முதல் செய்வது வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மாங்குளம் பகுதியில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 70 நாள் பயிரான வெண்டை சாகுபடி இப்பகுதியில் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது. இந்த செடிகளை பயிரிட்டவர்கள், 45வது நாளில் இருந்து அறுவடை பணிகளை தொடங்கலாம்.

தற்போது இப்பகுதியில் வெண்டைக்காய்கள் செடிகளில் அதிக அளவில் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடையான வெண்டைக்காய் மூட்டைகளாக கட்டப்பட்டு சரக்கு வாகனங்களின் உதவியுடன் மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சில விவசாயிகள் அருகில் உள்ள வாரச்சந்தைகளுக்கு வியாபாரத்திற்காக அவற்றை அதிகம் கொண்டு செல்வர். மொத்த வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்யும்போது கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை கிடைக்கும்.

இதற்கு மாறாக விவசாயிகளே நேரடியாக சில்லறை விற்பனையில் ஈடுபட்டால் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்ய முடிகிறது. தற்போது விளைச்சல் சிறப்பாக இருப்பதால், வெண்டை பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Alagarkoil ,Madurai ,
× RELATED கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமியைக்...