கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் எவ்வித பாதுகாப்புகளின்றி தகர மேற்கூரையின் மேல் நின்று குப்பைகளை அகற்றும் அபாயகரமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால், மருத்துவமனை வளாகம் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்த மருத்துவமனையில் தூய்மை பணி மற்றும் செக்யூரிட்டி பணிகளுக்கு என தனியார் ஒப்பந்த பணியாளர்கள் சுமார் 200 பேர் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதில், பெண் பணியாளர்களும் பலர் உள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் பெண் தூய்மை பணியாளர்களை தொடர்ந்து பல்வேறு அபாயகரமான பணிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்ய வற்புறுத்தி வருகிறது.
அதன்படி, டாக்டர்கள் கார்கள் பார்க்கிங் செய்யும் இடங்கள், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் காத்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தகர மேற்கூரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தகர மேற்கூரைகளில் மரங்களில் இருந்து விழும் இலைகள் மற்றும் நோயாளிகள் ஜன்னல் வழியாக வீசும் பொருட்களை தூய்மை பணியாளர்கள் வைத்து அகற்றப்படுகிறது.
இப்பணிக்காக வயதான பெண் தூய்மை பணியாளர்களை தகர மேற்கூரைகளின் மேல் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்காமல் ஏற வைக்கின்றனர். பின்னர், அவர்கள் அந்த மேற்கூரையின் மேல் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த பணியானது தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடந்து வருகிறது.
தூய்மை பணியாளர்கள் வயதான ஏழை பெண்கள் என்பதால் வேறுவழியின்றி மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் பணியானது அபாயகரமான பணி என தெரிந்தும் அதனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என கூறுகின்றனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்களை தகர மேற்கூரையின் மேல் நின்று குப்பைகளை அகற்ற சாகசம் செய்து வருவதை தடுக்க வேண்டும் எனவும், இது போன்ற அபாயகரமான பணியில் அவர்களை ஈடுபடுத்த கூடாது எனவும் சமூகஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
