*வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை
ஆற்காடு : உரக்கடைகளில் யூரியாவை அதிகப்படியாக பதுக்கி வைத்தால் முழுமையாக லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
உரங்களின் தரம் இருப்பு மற்றும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு மேல் விலை விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக வேளாண்மை துறை அதிகாரிகள் உரக்கடைகளில் திடீர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் நேற்று ஆற்காடு வட்டாரம் முள்ளுவாடி கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கி உரக்கடை மற்றும் தனியார் உரக்கடைகளை நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது கடையில் உள்ள உரம் மூட்டைகளின் எண்ணிக்கையும் பதிவேட்டில் உள்ள கணக்குகளும் சரியாக உள்ளதா என பதிவேடுகளை பார்வையிட்டார்.
பின்னர் உரக்கடைகளில் விதிகளை மீறி கூடுதல் விலைக்கு உரங்களை விற்றாலோ, அதிகப்படியாக யூரியாவை பதுக்கி வைத்தல் போன்ற செயலில் ஈடுபட்டால் முழுமையாக லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் யூரியாவை ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு 2 மூட்டைகள் போதுமானது என்றும் அதிகப்படியாக காம்ப்ளக்ஸ் டிஏபி உரங்களை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.மேற்கண்ட ஆய்வின் போது ஆற்காடு வட்டார வேளாண்மை அலுவலர் ஆனந்த் மற்றும் வேளாண்மை துறையினர் உடன் இருந்தனர்.
