×

நீட் தேர்வு, இந்தி, சமஸ்கிருத திணிப்பு; திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்: தவெக அரசு மீது ஆ.ராசா சரமாரி தாக்கு

ஆலந்தூர்: ஒன்றிய பாஜக அரசின் நீட் தேர்வு மற்றும் இந்தி, சமஸ்கிருத திணிப்பை கண்டித்து திமுக மாணவரணி சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. மாநில மாணவர் அணி செயலாளர் ஜெ.வீரமணி தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில் 5000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்து ஆ.ராசா பேசியதாவது; ஒன்றிய அரசை எதிர்த்து துணிச்சலோடு கேள்வி கேட்காத ஒரு சோபா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய ஆட்சியின் அக்கிரமங்களை கேட்காத ஒரு பொம்மை அரசாங்கம் தமிழ்நாட்டில் உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் ஆட்சி அமைத்து உள்ளீர்கள். அவர்களை அமைச்சராக்கிய உங்களுக்கும் வெட்கம் இல்லை, அமைச்சர் பதவி வாங்கிய அவர்களுக்கும் வெட்கம் இல்லை. வெட்கம்கெட்ட ஆட்சி தமிழ்நாட்டில் நடப்பதால்தான் மோடிக்கு இவ்வளவு தைரியம். மோடி அரசை எதிர்த்து பேச இந்த அரசுக்கு அருகதை உள்ளதா? ஒரே ஒரு வார்த்தை டெல்லியை எதிர்த்துப் பேச தமிழ்நாட்டு அமைச்சருக்கு தைரியம் உள்ளதா? உங்களிடம் உள்ள எந்த சோபா செட் டப்பாவிற்காவது தமிழ்நாட்டின் வரலாறு தெரியுமா? பாசிசத்தை எதிர்ப்பவராக இருந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தை கூட்டி நீட்டுக்கு எதிராக தீர்மானத்தை இயற்ற தயாரா? அவையில் திமுகவை விமர்சிக்கும்போது மட்டும் முதல்வர் பேசுகிறார். இரவு முழுவதும் திமுகவை திட்ட ரிகர்சல் பார்த்திருப்பார் போல.

எனக்கு கிடைத்த தகவல் முதலமைச்சர் விஜய் நிலை கண்ணாடி முன்னாடி நின்று ரிகர்சல் பார்ப்பதாக தகவல். ஆட்சிக்கு வந்து என்ன கிழிக்கப்போகிறாய் என்று சொல்லு, குறை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்க கூடாது. தனது ஆட்சியில் என்ன கழட்டு வீர்கள் என்று சொல்லவேண்டும். பாசிசம், பாயசம் என பேசிய முதலமைச்சர் விஜய் மத்திய அரசை எதிர்த்து பேச முடியவில்லை. திமுக ஆட்சியில் இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமார் போல் மோடியும் கொக்கரித்தால் திமுக தலைவர் அனுமதி பெற்று மாணவரணியும் இளைஞரணியும் தமிழ்நாட்டின் சிறைகளை நிரப்புவோம். மோடி அரசாங்கத்துக்கு மௌனம் காத்து தமிழ்நாட்டின் சோபா செட் அரசாங்கம் முட்டு கொடுத்து வருகிறது.

முதலமைச்சருக்கு தைரியம் இருந்தால், தமிழ்நாட்டு மக்களின் மீது அக்கறை இருந்தால் குறை சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று சொல்லவேண்டும். விரைவில் ஒன்றிய, மாநில அரசாங்கத்தை எதிர்த்து நாடு தழுவிய பெரிய போராட்டத்தை திமுக நடத்தும். இவ்வாறு பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், மாணவரணி துணை செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், இரா.தமிழரசன், பி.செந்தில்குமார், தமிழ் கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், வி.ஜி.கோகுல், பூரண சங்கீதா, சின்னமுத்து, ஜெ.ராமகிருஷ்ணன், ஆர்.சுரேஷ்குமார் கலந்துகொண்டனர்.

Tags : NEET ,DMK ,A.Raza ,Thaveka government ,Alandur ,Saidapet, Chennai ,Union BJP government ,J.Veeramani ,
× RELATED சொல்லிட்டாங்க…