×

அதிமுகவில் இருந்து விலகி பதவியை ராஜினாமா செய்த 4 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இடைத்தேர்தலில் சீட் இல்லை; தவெக அளித்த அதிர்ச்சி வைத்தியம்; தொகுதியில் நல்ல பெயர் இல்லை என கூறி செக்

சென்னை: அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த 4 முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு தொகுதியில் நல்ல பெயர் இல்லை என கூறி இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது என தவெக தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யாபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்தனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரும் உடனடியாக இவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, இவர்கள் நால்வரும் முறைப்படி தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இவர்கள் தவெகவுக்கு தாவிய சமயத்தில், இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் போது மீண்டும் இவர்களுக்கே அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற ஒரு மறைமுக உடன்பாடு இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் இவர்களுக்கு மீண்டும் சீட் கொடுப்பதில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக தலைமைக்கு முற்றிலும் விருப்பமில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, தவெக தலைமை அந்தந்தத் தொகுதிகளில் நடத்திய மிக ரகசியமான கள ஆய்வின் முடிவுகள்தான். மக்கள் தங்களுக்கு ஐந்து ஆண்டுகள் சேவை செய்ய அள்ளி வழங்கிய வாக்குகளை மதிக்காமல், தங்களின் சுயநல அரசியல் காரணங்களுக்காகவும், உட்கட்சிப் பூசல்களுக்காகவும் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்த இந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீது தொகுதி மக்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியும் கோபமும் நிலவி வருவது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் நால்வருக்கும் தற்போதைய நிலையில் அந்தந்தப் பகுதிகளில் போதிய நற்பெயரோ அல்லது சொந்த செல்வாக்கோ பெரிய அளவில் இல்லை என்பதால், இவர்களையே மீண்டும் வேட்பாளர்களாக நிறுத்தினால் தவெக அங்கு மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்றும் கட்சி மேலிடம் கணித்துள்ளது. மற்ற கட்சிகளில் இருந்து பதவிக்காகவும் சுயநலத்திற்காகவும் ஓடி வருபவர்களுக்கு உடனடியாகப் போட்டியிட வாய்ப்பளித்தால், அது கட்சியின் கொள்கைக்கும் பொதுமக்களிடையே உள்ள பிம்பத்திற்கும் மிகப்பெரிய கலங்கத்தை ஏற்படுத்திவிடும் என்று முதல்வர் விஜய் மூத்த நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத்தில் தவெக அரசு தனது சொந்த பலத்தை நிரூபிக்கவும், தனிப் பெரும்பான்மைக்கான இலக்கை எட்டவும் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானது என்பதால், தவெக தலைமை எந்தவொரு தேவையற்ற ரிஸ்க்கையும் எடுக்க விரும்பவில்லை.

இதன் காரணமாக, இவர்களுக்குப் பதிலாக அந்தந்தத் தொகுதிகளில் தவெகவின் தீவிர உழைப்பாளர்களுக்கும், மக்கள் மத்தியில் நற்பெயர் கொண்ட புதிய முகங்களுக்கும் வாய்ப்பளிக்க கட்சி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இன்னொரு புறம், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மிகப்பெரிய சட்டப் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது. இந்த 4 எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக சார்பில் கட்சித் தாவல் நடவடிக்கை நிலுவையில் இருந்த ஒரு இக்கட்டான சூழலில், அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் அவசர அவசரமாக ஏற்றுக் கொண்டது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அதிமுக கொறடா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கில் தங்களது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் நீதிமன்றம் இடைக்காலத் தடை எதுவும் விதித்துவிடக் கூடாது என்பதற்காக, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயன்று வருகின்றனர்.

பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, தாய் கட்சியான அதிமுகவிலும் இடமில்லாமல், நம்பி வந்த தவெகவிலும் உரிய அங்கீகாரமும் தேர்தலுக்கான சீட்டும் கிடைக்குமா என்ற மிகப்பெரிய அச்சத்தில் இந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், அவர்களது ஆதரவாளர்களும் தற்போது பெரும் தவிப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர். தவெகவின் இந்த திடீர் அரசியல் நகர்வும் தயக்கமும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், மற்ற கட்சிகளில் இருந்து தவெகவுக்கு தாவத் தயாராக இருந்த பிற அதிருப்தி தலைவர்கள் மத்தியில் ஒருவித தயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dejak ,Czech ,Chennai ,Atamugavil ,M. L. ,A.L. L. Information ,
× RELATED சொல்லிட்டாங்க…