×

சில்லி பாயின்ட்…

 

* இந்திய அணி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி கடந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் மீண்டும் டெஸ்ட் அரங்குக்கு திரும்பப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோஹ்லி, ‘அதற்கு வாய்ப்பே இல்லை. டெஸ்ட் போட்டியை பொறுத்த வரை எனது இன்னிங்ஸ் முடிந்துவிட்டது’ என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

* மகளிர் உலக கோப்பை டி20 தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுத்துள்ளது. மான்செஸ்டரில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்த நிலையில், தென் ஆப்ரிக்கா 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து வென்றது. அந்த அணியின் காப் 2 விக்கெட் மற்றும் 81* ரன் எடுத்து ஆட்ட நாயகி விருது பெற்றார். முதல் பிரிவில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி, எஞ்சியிருக்கும் 2 போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒரு போட்டியில் தோற்றாலும் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படும்.

* லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 253 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 391 ரன் எடுத்த நிலையில், இங்கிலாந்து 291 ரன்னுக்கு சுருண்டது. 100 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசி. 362 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து 463 ரன் என்ற மிகக் கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து 58.1 ஓவரில் 209 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. 2 இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட் அள்ளிய மேட் ஹென்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

* வங்கதேச அணியுடன் நடந்த டி20 தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. சட்டோகிராமில் நேற்று நடந்த கடைசி போட்டியில் வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுத்தது. கேப்டன் தவ்ஹித் ஹிருதய் ஆட்டமிழக்காமல் 61 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய ஆஸி. 11 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து எளிதாக வென்றது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 60, இங்லிஸ் 17, கானலி 15 ரன் எடுத்தனர். மார்ஷ் ஆட்டநாயகன் விருதும், ரென்ஷா தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

பெர்லினில் உள்ள ஸ்டெஃபி கிராஃப் அரங்கத்தில் நடைபெற்ற பெர்லின் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்ற செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா கோப்பையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

Tags : Chilli Point… ,Virat Kohli ,
× RELATED உலகக் கோப்பை குத்துச்சண்டை...