வான்கூவர்: பிபா உலக கோப்பையில் அறிமுகமாகி 92 ஆண்டுகள், 25 நாள் காத்திருப்புக்குப் பிறகு எகிப்து அணி முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. வான்கூவரில் நடந்த ஜி பிரிவு லீக் ஆட்டத்தில், 15வது நிமிடத்திலேயே நியூசிலாந்து வீரர் சுர்மான் அபாரமாக கோல் அடிக்க, எகிப்து அணி 0-1 என பின்தங்கியது. வழக்கம்போலவே இந்த முறையும் முதல் வெற்றிக் கனவு கலைந்து போகுமோ என எகிப்து ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். மேற்கொண்டு இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்காதால், இடைவேளை வரை இதே நிலை நீடித்தது.
இரண்டாவது பாதியில் ஒருங்கிணைந்து விளையாடி கடும் நெருக்கடி கொடுத்த எகிப்து அணிக்கு முஸ்தபா ஜீகோ 58வது நிமிடத்தில் கோல் போட்டு 1-1 என சமநிலை ஏற்படுத்தினார்.இதைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் முகமது சாலா 67வது நிமிடத்திலும், டிரெஸிகுவட் 82வது நிமிடத்திலும் கோல் அடிக்க, எகிப்து அணி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கால காத்திருப்புக்குப் பிறகு பிபா உலக கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்ய… அந்த அணி ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர்.
மகத்தான தருணம்… கேப்டன் சாலா நெகிழ்ச்சி
ஆட்ட நாயகன் விருது பெற்ற எகிப்து கேப்டன் முகமது சாலா, வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த வெற்றி குறித்து கூறுகையில், ‘இது மறக்க முடியாத மகத்தான தருணம். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையின்றி தவிக்கிறேன். அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. இதே உத்வேத்துடன் சிறப்பாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற முயற்சிப்போம். எகிப்து கால்பந்து வரலாற்றில் இந்த சாதனை என்றென்றும் நினைவில் நின்று போற்றப்படும். இன்றும் நாளையும் வெற்றிக் கொண்டாட்டம் தான். அதன் பிறகே அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம்’ என்றார்.
