×

2026 பிபா உலக கோப்பை கால்பந்து: ஏழ்மையை வென்ற கின்னஸ் சாதனையாளன்! ஈரான் கோல் கீப்பர்

 

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் முதற்கட்ட லீக் சுற்று முடிவுக்கு வரும் நிலையில்… பிரபல அணிகளுக்கு சவால் விடும் கற்றுக்குட்டி அணிகள், உலக அளவில் புகழ் பெற்ற நட்சத்திரங்களை பின்னுக்குத் தள்ளி தங்களின் தனித்துவமான திறமையால் பிரகாசிக்கும் வீரர்கள் கவனம் ஈர்க்கின்றனர். அந்த வகையில் கியூரகோ கோல் கீப்பர் எலாய் ரூம் (37 வயது)மற்றும் கபோ வெர்டே அணி கோல் கீப்பர் வோஸின்ஹா (40 வயது) ஆகியோரைத் தொடர்ந்து ஸ்பாட் லைட் வெளிச்சத்தில் ஜொலிக்கிறார் ஈரான் கோல் கீப்பர் அலிரெஸா பெய்ரன்வாண்ட்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று ஈரான் – பெல்ஜியம் இடையே நடந்த ஜி பிரிவு லீக் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் எத்தரப்பும் கோல் அடிக்காமல் டிராவில் முடிந்தது.

உலக அளவில் 9வது ரேங்க் அணியான பெல்ஜியத்துக்கு தண்ணி காட்டி தவிக்கவிட்டார் அலிரெஸா. ஒன்றரை மணி நேர போராட்டத்தில் பெல்ஜியத்தின் 7 கோல் முயற்சிகளை முறியடித்த அல்ரெஸா ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த 6 அடி 4 அங்குல மனிதரைத் தாண்டி பந்தை வலைக்குள் திணிப்பதற்கு பிரம்மப் பிரயத்தனம் கூட போதாது என்பதே நிதர்சனம். 2016 அக்டோபரில் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை அதிக தூரத்துக்கு எறிந்தது (200.14 அடி/ 61.002 மீட்டர்) மற்றும் அதிக தூரத்துக்கு அடிக்கப்பட்ட ‘டிராப் கிக்’ (255.95அடி/ 78.014 மீட்டர்)என இரண்டு கின்னஸ் உலக சாதனைக்கு சொந்தக்கார் அலிரெஸா.

ஈரானின் வறண்ட லொரெஸ்தான் மலைப்பகுதியில் மிக ஏழ்மையான குர்த் இன குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவரின் கால்பந்து கனவுக்கு முதல் முட்டுக்கட்டை போட்டவர் அப்பா தான். அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில்,கிளவுஸ் வாங்க காசு கேட்டு நச்சரித்தால் என்ன செய்ய முடியும்? நண்பர்களிடம் கெஞ்சி கொஞ்சம் காசு சேர்த்துக்கொண்டு தலைநகர் தெஹ்ரானுக்கு பஸ் ஏறினார் அலிரெஸா. கிளப் மற்றும் ஸ்டேடிய வாசலில் தான் தூக்கம். தெருவை சுத்தம் செய்வது, கார்களின் டயர்களைக் கழுவுதல், ஆயத்த ஆடை பணி, பர்கர் மாஸ்டர்… என்று வயிற்றுப் பிழைப்புக்காக செய்யாத வேலை இல்லை.

சிறு வயதில், கற்களை வெகு தூரம் எறியும் ‘தல்பரான்’ என்ற உள்ளூர் விளையாட்டில் ஆர்வமாக இருந்தது, அல்ரெஸாவின் கால்பந்து பயிற்சியின்போது வெகுவாகக் கை கொடுத்தது.பந்தை வெகு தொலைவுக்கு எறியக் கூடிய அவரது திறமை, நல்ல உயரம், பரந்து விரிந்த தோள்கள் பயிற்சியாளர்களின் பார்வையில் பட கோல் கீப்பராக உருவெடுத்தார்.நடப்பு உலக கோப்பை தொடரில் அமெரிக்க விசா பிரச்னைகள், பயிற்சி முகாம் இல்லாதது, அடுத்தடுத்து விமானப் பயணங்கள், சரியான ஓய்வு/தூக்கம் இல்லாததால் உடல் மற்றும் மனச்சோர்வு… என பல்வேறு இடர்களயும் தாண்டி முதல் 2 லீக் ஆட்டத்தையும் டிரா செய்து 2 புள்ளிகளை பெற்றுள்ளதே ஈரான் அணிக்கு மிகப் பெரிய சாதனை தான். இன்னமும் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்கும் அந்த அணிக்கு உத்வேகம் அளிப்பதே அலிரெஸா போன்ற வீரர்களின் அர்ப்பணிப்புதான் என்றால் மிகையல்ல.

Tags : FIFA World Cup ,Iran ,
× RELATED உலகக் கோப்பை குத்துச்சண்டை...