×

பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் உறுப்பினர்கள் கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எச்சரிக்கை

 

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் உறுப்பினர்கள் கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் எச்சரித்தார். சட்டப்பேரவை நடவடிக்கை தொடர்பாக உறுப்பினர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசியதாவது:

* உறுப்பினர்கள் தங்கள் விவாதத்தில் பேசும்போது, நீதிமன்ற விசாரணையில் இருக்கும் எந்த பொருள் மீதும் தங்கள் கருத்துகளை சொல்லவோ, குறிப்பிடவோ கூடாது. அப்படி சொன்னதால், மதுரையை சேர்ந்த உறுப்பினர் சொன்னது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

* உறுப்பினர்கள் எவரையும் தனிப்பட்ட முறையில் முறையற்ற வார்த்தைகளால் தாக்கி பேசக்கூடாது. மேலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் மற்றும் ஊறுவிளைவிக்கும் நோக்கில் சர்ச்சை ஏற்படும் வகையில் பேசக்கூடாது.

* சட்டப்பேரவை நடவடிக்கைகள் சிறப்பாக அமையவும், பேரவை நேரத்தை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்த ஏதுவாகவும் உறுப்பினர்கள் உரையாற்றும்போது அவ்வப்போது பேரவையின் ஆய்வில் உள்ள மற்றும் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட பொருள் குறித்து சுருக்கமாகவும், தெளிவாகவும் ஷாட் அன்ட் சுவீட்’ ஆக பேச வேண்டும்.

* உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான பிரச்னைகள் குறித்து தங்கள் உரையில் கூறலாம். தங்கள் தொகுதி சார்ந்த பொதுவான கோரிக்கைகள் குறித்து என்னிடம் எழுதி கொடுத்தால் அவற்றை தாங்கள் பேசியதாக அவைக்குறிப்பில் பதிவு செய்து தங்கள் உரையில் சேர்த்து கொள்ளப்பட்டு, அந்த உரையின் நகல் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

* பேரவை நடவடிக்கைகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், பேரவையில் உள்ள உறுப்பினர்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த வெள்ளிக்கிழமையன்று பேரவையில் சில உறுப்பினர்கள் அவையில் உள்ள மற்ற உறுப்பினர்களை கேலி செய்யும் வகையில் செய்த முகப்பாவனைகள் மற்றும் சைகை மொழிகள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வேகமாக பரவி வருகின்றன. இது சட்டசபையின் மாண்பையும், கண்ணியத்தையும் குறைக்கும் செயல் ஆகும்.

* இந்தியாவில் உள்ள பிற சட்டசபைகளுக்கு எடுத்துக்காட்டாகவும், நூற்றாண்டு வரலாற்று பெருமை கொண்ட இந்த மாமன்றத்தின் மரபை காத்திடும் வகையிலும், கண்ணியத்தையும், மாண்பையும் உயர்த்திப் பிடிக்கும் வகையிலும் பேரவையின் சில நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் உறுப்பினர்கள் தங்கள் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து இதுபோன்ற கண்ணியக்குறைவான செயல்களில் இனிவரும் காலங்களில் ஈடுபடக்கூடாது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், அந்த செயல் அவையின் உரிமை மீறலாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் ஆதவ்வை கண்டித்த சபாநாயகர்
பேரவையில் ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை சபாநாயகர் கண்டித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி பேசினார். அதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முந்தைய திமுக ஆட்சிக்காலத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடந்ததாகக் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ‘ஆதாரம் இல்லாமல் எதையும் பேச கூடாது, ஆதாரத்துடன் பேச வேண்டும்’ என்று கண்டித்து கையை நீட்டி எச்சரித்தார். அதற்கு, ‘நாளை ஆதாரத்துடன் பேசுகிறேன்’ என ஆதவ் அர்ஜுனா கூறினார். இதேபோன்று, தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடப்பட்ட விவகாரம் குறித்த விவாதத்தின்போதும், அவையின் மாண்பைக் காக்கும் வகையில் ஆதாரத்துடன் மட்டுமே பேச வேண்டும் என்று சபாநாயகர் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Speaker ,J.C.T. Prabhakar ,Chennai ,
× RELATED தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேரை...