* கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சொல்லித்தான் அழைத்துச் செல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார்.
* எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று பாதிக்கப்பட்ட பெண் பேட்டி கொடுத்திருக்கிறார். யார் அந்த மேலிடம் என்று இன்றைக்கு மக்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
* யார் தப்பு செய்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என்று சொன்னார் நமது முதல்வர். ஆனால், இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.
சென்னை: தமிழகத்தில் குழந்தைகள் முதல்வர் பெரியவர்கள் வரை பாதுகாப்பு இல்லை என்றும், ஒரே மாதத்தில் 200க்கும் அதிமான பாலியல் குற்றங்கள் பதிவாகி உள்ளது என்றும் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டி பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை எப்படி இருக்கிறது என்று செய்திகளைப் பார்த்தால் அவ்வளவு கொடூரமாக இருக்கிறது. ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடந்திருக்கின்றன. அதில் 100க்கும் அதிகமான குற்றங்கள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்.
ஜனநாயக நடைமுறைக்கு எதிராக குழந்தைகளைப் பயன்படுத்திப் பெரியவர்களிடம் வாக்கு கேட்டார் இன்றைக்கு இருக்கக்கூடிய முதல்வர். ஆனால், அவர் ஆட்சியில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை, பெரியவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்கிற நிலைமை இன்றைக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த புதிய அரசு ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே, கோவையில் 10 வயது பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு. கும்மிடிப்பூண்டியில் ஒரு மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, புதரில் வீசப்பட்டு, அதன்பின்பு, அந்த குழந்தை இறந்து போய்விட்டது.
இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அங்கு இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். கோவையிலும் சரி, கும்மிடிப்பூண்டியிலும் சரி, இரண்டு சம்பவத்திலேயுமே மரணமடைந்த குழந்தைகளுடைய உடலை, பெற்றோரிடம் முறையாக கொடுக்காமல், வேறு இடத்தில் காவல்துறை மூலமாகவே அடக்கம் செய்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கிறபொழுது, நாம் இன்றைக்கு தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா இல்லை உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மாதிரி வடநாட்டில் இருக்கிறோமா என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது. `சிங்கப்பெண் படை’ என்று ஒரு திட்டத்தை முதல்வர் தொடங்கினார். அந்தத் திட்டம் வந்த அடுத்த நாளே, காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்கள்.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மட்டும், கடந்த ஜூன் 12ம்தேதி 24 மணி நேரத்தில், 12 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. சிங்கப்பெண் படை குற்றவாளிகளைப் பின்தொடருவார்கள் (சேஸ் பண்ணுவார்கள்) என்று பார்த்தால், அவர்களும் அமைதியாக (கூலாக) ரீல்ஸ் போட்டுப் போஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். “மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’’ என்று சொல்வார்கள். அதைச் சிங்கப்பெண் படை பாலோ பண்ணுதோ என்று மக்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது.
சபாநாயகர்: தகுந்த ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக அவையில் பேசக் கூடாது. உதயநிதி ஸ்டாலின்: திருவாரூரில் ஆளுங்கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர், கல்லூரி மாணவியை ஈவ்-டீசிங் செய்து இப்போது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். இது எல்லாவற்றிற்கும் மேல் ஒரு கொடுமை, தூத்துக்குடியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண்ணை, இரண்டு ஆளுங்கட்சி ஆட்கள் காரில் அழைத்துக்கொண்டு போய், மயக்க மருந்து கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசிய பாதிக்கப்பட்ட பெண், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சொல்லித்தான் அழைத்துச் செல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார்.
எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று பாதிக்கப்பட்ட பெண் பேட்டி கொடுத்திருக்கிறார். யார் அந்த மேலிடம் என்று இன்றைக்கு மக்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். தனக்கு நேர்ந்த கொடுமையை, ஆளுங்கட்சியினுடைய அமைச்சர்கள், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களிடம் சொன்னதாகவும் பாதிக்கப்பட்ட பெண் இன்றைக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால் நடந்தது என்ன?
யார் தப்பு செய்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என்று சொன்னார் நமது முதல்வர். ஆனால், இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை.
அதற்கு மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறீர்கள். இதற்கு பேர்தான் மாற்றமா. இதற்கு பேர்தான் தூய சக்தியா என்று மக்கள் கேட்கிறார்கள். 6 மாதம் டைம் எடுத்துக்கொண்டு வந்து சட்ட ஒழுங்கை நிலைநாட்டுகிற வரைக்கும் நாங்கள் காத்துக்கொண்டு இருக்க முடியாது, நாடும் தாங்காது. இதைப்பற்றிக் கேள்வி எழுப்பினால் கூட, காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கக்கூடிய முதல்வர் எதுவும் பேசமாட்டேன் என்கிறார். “To remain silent in the face of evil is itself evil’’ என்று ஒரு பழமொழி உண்டு. அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இந்த அரசுக்குச் சரியாகப் பொருந்துகிறது. ஆகவே முதல் வேலையாகச் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் அடிப்படையில் திமுக ஆட்சியில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த குற்றங்களுடன் ஒப்பிடும்போது 2024ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் புழக்கம். 6 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் கிடையாது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. தவெக ஆட்சியில் கடந்த 40 நாட்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளோம். காவல்துறையில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் நிலவி வரும் போதைப்பொருள் புழக்கத்தை கடந்த திமுக ஆட்சியில் கட்டுப்படுத்த தவறிவிட்டனர். போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். தவெக ஆட்சியின் தவறு செய்பவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய் தலைமையில் சட்டம் – ஒழுங்கு நேர்மையாக மாற்றப்பட்டுள்ளது. 6 மாதத்திற்குள் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழும் வகையில் மாறும். தவெக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். உதயநிதி ஸ்டாலின்: சீர்திருத்தம் செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள், செய்யுங்கள். தூத்துக்குடியில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்? அது மட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
