×

வேளச்சேரியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

சென்னை: பருவ மழையின்போது வேளச்சேரியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் குறிப்பிட்டள்ளது.

வேளச்சேரி ஏரி ஆரம்பத்தில் சுமார் 265 ஏக்கர் பரப்பளவைக் கொண்டிருந்தது. ஆனால், தொடர் ஆக்கிரமிப்புகள் காரணமாக அது தற்போது வெறும் 55 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. இதன் விளைவாக, லேசான மழைக்கே வேளச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாகி வருகிறது.

வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஏரியை மீட்டெடுப்பதில் அரசு அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

வேளச்சேரி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளை நெடுஞ்சாலைத்துறை, வீட்டு வசதி வாரியம், நகர்புற குடியிருப்பு வாரியம் போன்ற் அரசு சார்ந்த துறைகள்தான் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை மீட்டெடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து வரும் ஜூலை 28ம் தேதிக்குள் நீர்வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதிகாரிகள் வரலாற்றில் இடம் பிடிக்கலாமே என்றும் தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது.

Tags : Velachery ,Southern Zone National Green Tribunal ,Chennai ,
× RELATED மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில்...