×

திருவண்ணாமலையில் 30.38 கோடி ரயில்வே மேம்பாலம் பணி மந்தம் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, மார்ச் 9: திருவண்ணாமலையில், ரயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர். திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 பிரதான சாலைகள் உள்ளன. அதில், போக்குவரத்து பயன்பாடு அதிகம் உள்ள, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மிக முக்கியமானது திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையாகும். திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, சென்னை மற்றும் புதுச்சேரி போன்ற பெரு நகரங்களுக்கு இந்த பிரதான சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். எனவே, இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் நெரிசலில் திணறுவது வழக்கம். மேலும், திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில், திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு அருகே ரயில்வே கேட் அமைந்திருப்பதால், போக்குவரத்து நெரிசலும் சிக்கலும் வெகுவாக இருந்தன.

ரயில் கடந்து செல்லும் நேரத்தில் ‘கேட்’ மூடப்படுவதால், நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதும், கேட் திறந்ததும் வாகனங்கள் முந்தி செல்வதில் விபத்து ஏற்படுவதும் வழக்கமாக இருந்தது. எனவே, திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் ரயில்வே பாதையின் குறுக்கே, சாலை மேம்பாலம் அமைக்கும் அறிவிப்பு கடந்த 2013ம் ஆண்டு வெளியானது. ஆனால், அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வர காலதாமதமானது.
இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இத்திட்டத்துக்காக, தமிழக அரசு ₹30.38 கோடி நிதி ஒதுக்கியது. இந்த மேம்பாலத்தின் மொத்த நீளம் 666 மீட்டர். ஓடுதள அகலம் 15 மீட்டர். மேலும், திருவண்ணாமலை சாலை வழியாக 82 மீட்டரும், திண்டிவனம் சாலை வழியாக 257 மீட்டரும் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

அதோடு, மேம்பாலத்தின் இருபுறமும், 15 மீட்டர் அகலத்தில் அணுகு சாலையும், 7 மீட்டர் அகலத்தில் இருபக்க சேவை சாலையும் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால், 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னும் 40 சதவீத பணிகள் முடியாமல் நிலுவையில் உள்ளன. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை பணிகள் நடைபெறவில்லை. அதைத்தொடர்ந்து, பணிகள் நடைபெற்றன. ஆனாலும், திட்டமிட்டபடி பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சாலை வழியாக செல்ல வேண்டிய வாகனங்களும், பொதுமக்களும் புறவழி சாலை வழியாக நீண்ட தூரம் பயணித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே, திருவண்ணாமலை மற்றும் போளூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கவும், பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Thiruvanamal ,
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...