நாகர்கோவில்: த.வெ.க. ஆட்சிக்கு வந்த பின் அந்த கட்சி நிர்வாகிகள் செய்யும் அத்துமீறல்களும், பாலியல் தொல்லை சம்பவங்களும் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளன. பாலியல் தொல்லை வழக்கில் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகரத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு தொல்லை கொடுத்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக அந்த கட்சியில் மாநகர செயற்குழு உறுப்பினராக இருந்த சாஞ்ஜியோ பேஸ்டன், சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒன்றே முக்கால் வருஷத்துக்கு மேல் த.வெ.க.வில் பணியாற்றி வருகிறேன். தற்போதைய மாவட்ட செயலாளர் மாதவனுக்கு நன்றாக என்னை தெரியும்.எனக்கு இணை செயலாளராக பொறுப்பு தருவதாக கூறி இருந்தார்கள். குழந்தை மற்றும் மனைவியை கூட கவனிக்காமல் கட்சி பணி செய்தேன். திடீரென மாநகர பொருளாளராக ஒருவரை நியமித்தனர். இது பற்றி கேட்ட போது இணை செயலாளர் பொறுப்பு இன்னும் வரவில்லை என்றனர். நான் தலைவர் பிறந்தநாளுக்கு மாநகர இணை செயலாளர் என போஸ்டர் அடிக்கிறேன் என்றேன். அதற்கு வேண்டாம் என கூறி விட்டனர். வேண்டுமென்றே என்னை திட்டமிட்டு ஓரம் கட்டுவது தெரிய வந்தது. கட்சிக்காக உழைத்து ஏமாற்றப்பட்டு உள்ளேன். இதனால் ஆதங்கப்பட்டு வெளியேறுகிறேன்.
மாநகரில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அந்த நிர்வாகி, கட்சியின் பெண் உறுப்பினர்களுக்கு டார்ச்சர் கொடுத்து உள்ளார். நாகர்கோவில் மாநகர உறுப்பினராக உள்ள ஒரு பெண்ணிடம், வாட்ஸ் அப் சாட்டிங் செய்துள்ளார். சாப்பிட்டீயா, பிஸியா, கால் பண்ணட்டுமா.. என கேட்டுள்ளார். மற்றொரு பெண்ணிடம் என்னை லவ் பண்ண மாட்டாயா? உனக்கு என்னை பிடிக்கவில்லையா, ஏன் ரிப்ளை செய்யவில்லை என்றெல்லாம் கேட்டு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவுகள் வைரலாகி உள்ளது. மாவட்டத்துக்கும் தெரியும். ஆனாலும் அந்த நிர்வாகி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதெல்லாம் கட்சி தலைமை கவனிக்கணும்.
இவ்வாறு பேசி உள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஆடியோவை அந்த நிர்வாகி சிறிது நேரத்தில் அழித்துள்ளார். ஆனால் அதற்குள் அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
