×

குளச்சல் அருகே வீடு புகுந்து மீனவர் குத்திக்கொலை

குளச்சல், ஜூன் 21: குமரி மாவட்டம் கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (51). மீனவர். இவரது மனைவி ஜாஸ்மின் லலிதா (46). 3 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் தம்பதி இடையே பிரச்னையில் ராஜன் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோபித்து கொண்டு குமரி மாவட்டம் குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியில் சகோதரி மேரி கலா (53) வீட்டுக்கு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

இரு வாரங்களுக்கு முன்பு ராஜன், கொட்டில்பாடு வந்து மனைவியை அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்தார். ஆனால் கணவருடன் செல்ல ஜாஸ்மின் லலிதா மறுத்து விட்டார். அப்போது மேரி கலாவுக்கும், ராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மேரி கலாவின் கணவர் புஷ்பநாதன் (56) சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். தனக்கு ஆதரவாக பேசவில்லையே என புஷ்பநாதன் மீது ராஜன் ஆத்திரம் அடைந்தார். மனைவி தன்னுடன் வர மறுப்பதற்கு புஷ்பநாதனும், அவரது மனைவி மேரி கலாவும் தான் காரணம் என
எண்ணினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜாஸ்மின் லதா, மேரி கலா இருவரும், நாகர்கோவில் வடசேரிக்கு வந்திருந்தனர். வீட்டில் புஷ்பநாதன் மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் ராஜன் அங்கு வந்து, தனது மனைவி எங்கே? என புஷ்பநாதனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லை என கூறி உள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ராஜன், எல்லா பிரச்னைக்கும் நீ தான் காரணம். உன்னை கொன்றால் எல்லாம் சரியாகி விடும் என கூறி கத்தியால் புஷ்பநாதனை இடது பக்க கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்தினார். இதில்அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மேல் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், புஷ்பநாதன் இறந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குபதிந்து ராஜனை நேற்று காலை கைது செய்தனர்.

Tags : Kulachal Kulachal ,Rajan ,Kadipatnam ,Kumari district ,Jasmine Lalitha ,
× RELATED வாழப்பாடி புழுதிக்குட்டை அணையில்...