×

கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகம்; மனைவிக்கு மொட்டையடித்து முகத்தில் கரியை பூசி சிறுநீர் குடிக்க வைத்த கணவன்: சட்டீஸ்கரில் நடந்த கொடூரம்

கொரியா: சட்டீஸ்கரில் மனைவியை கட்டிவைத்து மொட்டையடித்ததோடு, சிறுநீரை குடிக்க வைத்த கணவன் மீது போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தில் ஜிதேந்திர காசியா என்பவருக்கும், தாரா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக தாரா கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

தாராவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஜிதேந்திர காசியா, கடந்த 14ம் தேதி தாரா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். பின்னர் தாராவின் கை, கால்களை கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கியதோடு, அவரை கொல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தின் போது தாராவின் தலைமுடியை வெட்டி மொட்டையடித்த கணவன், அவரது முகத்தில் கரிக்கட்டை மற்றும் இன்ஜின் ஆயிலை பூசி அவமானப்படுத்தினார். மேலும் குழந்தைகளை வைத்தே தாராவை கன்னத்தில் அறையச் செய்ததோடு, கட்டாயப்படுத்தி தனது சிறுநீரையும் குடிக்க வைத்துள்ளார்.

இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 85, 115(2), 296 மற்றும் 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட தாரா கூறுகையில், ‘ஆரம்பத்தில் இருந்தே அவர் என் மீது சந்தேகம் கொண்டு தாக்கினார். நான் கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் சித்ரவதை தொடர்ந்தது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என்று கதறினார். கூடுதல் எஸ்பி சுரேஷா சவுபே கூறுகையில், ‘வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கூடுதல் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்’ என்றார்.

Tags : Chhattisgarh ,Korea ,Jitendra Ghazia ,Tara ,Chhattisgarh state Korea ,
× RELATED வாழப்பாடி புழுதிக்குட்டை அணையில்...