×

ஒன்றிய அரசின் ஆணைப்படி ஆன்லைனில் அனுமதி கொடுத்துவிட்டு பணம் வாங்காமல் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்ததாக கதைவிடும் தவெக அரசு: 1000 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி மூலம் மும்மொழி திட்டத்துக்கு கதவு திறப்பு

சென்னை: முதல்வர் விஜய் டெல்லி சென்று வந்த பின்பு தான் 1000 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாஜ செய்ய முடியாததை தவெக அரசு மூலம் செய்ய திட்டமிட்டுள்ளதா என்று கல்வியாளர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய அரசு வகுத்த உத்தரவுப்படி, ஆன்லைனில் அனுமதி கொடுத்து விட்டு ஏதோ பணம் வாங்காமல் கொடுத்ததாக தவெக அரசு கதை விடுவதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திமுக ஆட்சியில் கடந்த 2006-11ம் ஆண்டுகளில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள் பாடத்திட்டம் ஒன்றாகவும், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பாடத்திட்டம் சிபிஎஸ்இ சார்ந்தும் இருந்து வந்தது. அதன்பிறகு மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி முறையே பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்த பிறகு தங்கள் பள்ளிகளுக்கு தனித்து அடையாளம் வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டில் பல பள்ளிகள் சிபிஎஸ்இ நோக்கி சென்றது.

அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2011-16 அதிமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை முடக்க பார்த்து அந்த முயற்சியும் தோல்வி அடைந்தையடுத்து அரசின் உதவியுடன் பல்வேறு பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாறியது. அதன்படி அந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்தது. 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போது ஏறக்குறைய 1800 சிபிஎஸ்இ பள்ளிகளும், 13000 தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் இருந்தது. 2006-11ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றவும் அதை பள்ளிகளில் வெளிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியது.

மேலும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற என்ஓசி கொடுப்பதை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை நடத்தியதை குறைத்ததுடன், சிபிஎஸ்இ பள்ளியாக மாறி இதை தொடர நினைத்ததும் நடக்காமல் போனது. உடனே தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஒன்றிய அரசை அணுகி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தேவையான என்ஓசி கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியது. அவர்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க என்ஓசி இல்லாமலும் விண்ணப்பம் செய்யலாம். அவர்கள் நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி 30 நாட்களில் அனுமதி வழங்க வேண்டும். தவறினால் மேலும் 15 நாள் அவகாசம் வழங்கப்படும். அதிலும் மாநில அரசு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் என்று விதிகளை ஒன்றிய அரசு மாற்றியது. ஆனாலும் தனியார்கள் பள்ளி நிர்வாகம் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதனால் குறைவான பள்ளிகளே சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றினர்.

மேலும் சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் தேசிய கல்விக்கொள்கையின் படி செயல்படும். தாய்மொழி தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை, இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு இருப்பதால் திமுக அரசு என்ஓசி வழங்காமல் இதுவரை அதை நிறுத்தி வைத்தாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அமைந்துள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு மறைமுக கூட்டணியாக பாஜ மனம் நோகாமல் இருக்கும் வகையில் தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற என்ஓசி கொடுத்துள்ளது. இதன்மூலம் இனி அவர்களுக்கு என்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து ஒன்றிய அரசு வசம் சென்று விடும். இதை மறைக்க தான் லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.
எனவே இந்த ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில் தமிழகத்தில் ஏறக்குறைய 13,000 தனியார் பள்ளிகளில் 50% பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி இருக்கும்.

மேலும் ஒரே நாளில் 1000 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து விட்டு தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் உரையில் தவெக அரசு கூறியுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் புதிய தேசிய கல்விக்கொள்கை படி செயல்படக்கூடியவை, அந்த பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் கட்டாயம் ஆகும். எனவே அதிகமான தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கொடுத்து அதன்மூலம் மறைமுகமாக இருமொழி கொள்கையை நீர்த்து போக செய்ய திட்டம் தான் இந்த 1000 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான அனுமதி என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த 1000 சிபிஎஸ்இ பள்ளிக்கு அனுமதி என்பது தவெக தலைவர், முதல்வர் ஜோசப் விஜய் டெல்லி சென்று வந்த பின்பு தான் இந்த அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கடந்த திமுக ஆட்சியால் பாஜவால் தமிழகத்தில் எதையெல்லாம் செய்ய முடியவில்லையோ அதையெல்லாம் மறைமுகமாக என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் பாஜ தமிழ்நாட்டில் தற்போது முதல்வராக பொறுப்பேற்று உள்ள ஜோசப் விஜய் மூலம் செய்ய திட்டமிட்டுள்ளதா என்று சந்தேகம் கல்வியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Tags : EU government ,CBSE ,Chennai ,Chief Minister ,Vijay ,Delhi ,Tamil Nadu ,Union ,
× RELATED மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து:...