×

3வது போட்டியிலும் ஆப்கான் பரிதாபம்; ஒயிட்வாஷ் செய்து அசத்தியது இந்தியா: பிரசித் விக்கெட் வேட்டை

சென்னை: ஆப்கானிஸ்தான் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரகமதுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன் இணைந்து ஆப்கான் இன்னிங்சை தொடங்கினர்.பிரசித் கிருஷ்ணாவின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆப்கான் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுக்க, அந்த அணி 36 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது. குர்பாஸ் 5, இப்ராகிம் 11, ரகமத் ஷா 5, ரசூலி 1 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.

இந்த நிலையில், கேப்டன் ஹஷ்மதுல்லா அஸ்மதுல்லா உமர்ஸாய் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. அஸ்மதுல்லா 50 ரன் விளாசி பிரின்ஸ் பந்துவீச்சில் பிரசித் வசம் பிடிபட்டார். ஹஷ்மதுல்லா முகமது நபி ஜோடி பொறுப்புடன் விளையாடி 57 ரன் சேர்த்தது. நபி 21 ரன் எடுக்க,ரஷித் கான் 5 ரன்னில் வெளியேறினார். கஸன்பார் (1), பரீத் அகமது (0) அடுத்தடுத்து ரன் அவுட்டாகினர். கடுமையாகப் போராடி ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்த கேப்டன் ஹஷ்மதுல்லா 102 ரன் விளாசி பிரசித் வேகத்தில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார்.

ஆப்கான் 44.2 ஓவரில் 218 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஜியாவுர் ரகுமான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பிரசித் 8.2 ஓவரில் 2 மெய்டன் உள்பட 23 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். குர்னூர், பிரின்ஸ், ஹர்ஷ் துபே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22.5 ஓவரில் 170 ரன் சேர்த்தது. ரோகித் 79 ரன் (69 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி நபி பந்துவீச்சில் செதிக்குல்லாவிடம் பிடிபட்டார்.

அதிரடியைத் தொடர்ந்த ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்த, இந்தியா 28.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது. ஜெய்ஸ்வால் 110 ரன் (86 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்), ஷ்ரேயாஸ் 20 ரன்னுடன் (19 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. பிரசித் கிருஷ்ணா ஆட்ட நாயகன் விருதும், கேப்டன் கில் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Tags : Afghanistan ,India ,Prasit ,Chennai ,M.A. Chidambaram Stadium ,Chepauk ,Hashmatullah ,
× RELATED ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள்...