×

ஹைதியை பந்தாடியது பிரேசில்: நாக்-அவுட் சுற்று நம்பிக்கை தக்கவைப்பு

பிலடெல்பியா: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஹைதி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில் அணி, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது. முதல் லீக் ஆட்டத்தில் மொராக்கோ அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததால் பிரேசில் அணி கடுமையான விமர்னசங்களை எதிர்கொள்ள நேரிட்டது. இதனால் ஹைதி அணியுடனான போட்டி 5 முறை சாம்பியனான பிரேசிலுக்கு கடும் நெருக்கடியாக மட்டுமல்லாது கவுரவ பிரச்னையாகவும் மாறியது.

பிபா தரவரிசையில் ஹைதி தங்களை விட 77 இடங்கள் பின்தங்கிய அணி என்றாலும், கூடுதல் எச்சரிக்கை உணர்வுடனே பிரேசில் தாக்குதலை தொடங்கியது. சில நிமிடங்களிலேயே தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய பிரேசிலுக்கு, ரபின்ஹோ அடித்த கோல் ஆஃப் சைடு ஆக அமைந்தது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. எனினும், ஒருங்கிணைந்து தாக்குதலை தீவிரப்படுத்திய பிரேசில் அணிக்கு மேத்யூஸ் குன்ஹா 23வது மற்றும் 36வது நிமிடங்களில் அபாரமாக கோல் அடித்து நம்பிக்கை அளித்தார்.

தொடர்ந்து வினிசியஸ் ஜூனியர் (45+3’) தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, இடைவேளையின்போது பிரேசில் 3-0 என வலுவான முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தியதால் மேற்கொண்டு கோல் ஏதும் விழவில்லை. ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்திய பிரேசில் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது. அதே சமயம், தொடர்ச்சியாக 2வது தோல்வியை சந்தித்த ஹைதி, நடப்பு தொடரில் வெளியேற்றப்பட்ட முதல் அணி என்ற அவப்பெயரை பெற்றது.

மயாமியில் ஜூன் 24ம் தேதி நடக்கும் சி பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் மோதுகிறது பிரேசில். 1974க்கு பிறகு உலக கோப்பையில் விளையாடத் தகுதி பெற்ற ஹைதி, ஆறுதல் வெற்றிக்காக மொராக்கோவை எதிர்கொள்ளும்.

Tags : Brazil ,Haiti ,Philadelphia ,FIFA World Cup ,Morocco ,
× RELATED ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள்...