விளாத்திகுளம் அருகே வியாபாரிகளிடம் ரூ.1.24 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

விளாத்திகுளம்,மார்ச் 9: விளாத்திகுளம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் மினி லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட 1லட்சத்து 24ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை அடுத்து புதூர் அருகே உள்ள சென்னமரெட்டிபட்டி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ஒன்றிய பொறியாளர் அழகு ராமா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்து சோதனை நடத்தியதில் அதில் பயணித்த வியாபாரிகளான வேலுச்சாமி(60), ஆசீர்வாதம்(38), ராமசுப்பு(40)  ஆகிய 3 பேரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1 லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3பேரும் விளாத்திகுளத்தில் இருந்து மதுரைக்கு பலசரக்கு பொருட்கள் மற்றும் பழங்கள் வாங்க செல்வதாகவும் இதற்காக பணத்தை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர்.  இருப்பினும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்டதால், 1 லட்சத்து 24 ஆயிரத்து 800 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாசில்தார் ரகுபதியிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: