×

கல்லூரி மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர், மார்ச் 9: தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. திருப்பூர் 15 வேலம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் அனுப்பர்பாளையம்புதூர், அவினாசி ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்று அனுப்பர்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில் தனியார் கல்லூரியை சேர்ந்த 130 மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம், வாக்குரிமை விற்பதற்கல்ல. சிந்திப்பீர், வாக்களிக்கும் உரிமையை சரியாக பயன்படுத்துவீர் உள்ளிட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் கோட்டாட்சியர் ஜெகநாதன், வடக்கு தாசில்தார் ஜெகநாதன், 15 வேலம்பாளையம் வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரி தண்டபானி உள்பட தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். ஊர்வலத்தையொட்டி 15 வேலம்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Election awareness march ,
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து மேலும் ஒருவர் கைது