- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஊழல் தடுப்புத் துறை
- சென்னை
- தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை
- திருப்பூர் மாவட்டம்
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 7 நாளில் பல்வேறு துறைகளில் பொதுமக்களிடம லஞ்சம் வாங்கியதாக 7 அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திருப்பூர் மாவட்டம் தொட்டியபாளையம் கிராம நிர்வாக அலுவலரான ஞானசேகர் என்பவரை கடந்த 15ம் தேதி கைது செய்தனர். அதேபோல், கடந்த 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டுமனை அளவீடு செய்ய ரூ.14 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது திருமயம் சர்வேயர் செல்வராஜ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பொறி வைத்து கைது செய்தனர்.
விழுப்புரத்தில் பட்டா மாற்றம் செய்ய கண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கடந்த 17ம் தேதி கைது செய்யப்பட்டார். இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் நெல் கொள்முதல் பில் விடுவிப்பதற்கு ஜி.பே மூலம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டு பெற்ற அக்கரைப்பட்டி நெல் கொள்முதல் நிலைய பில் கிளர்க் சுமன்ராஜ் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக ரூ.9ஆயிரம் தனது உதவியாளர் சுப்பையா மூலம் பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 பேரையும் கடந்த 18ம் தேதி கைது ெசய்தனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி மின்பகிர்மான கழகம் உதவி செயற்பொறியாளர் கதிர்வேல் என்பவர் 60 கிலோ வாட் சோலார் பேனர் அமைக்க பரிந்துரை செய்ய ரூ.90 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை திருவேற்காடு மின்வாரியத்தில் வணிக ஆய்வாளராக உள்ள ஜமாலுதீன் என்பவர் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது ெசய்தனர். அதேபோல், கடந்த 7 நாளில் 3 ஊழல் வழக்குகளில் நீதிமன்றம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை மற்றும் அபராதம் பெற்று தரப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
