×

நெல்லை அருகே போதை ஆசாமி தகராறு; சிங்கப்பெண் படையை அழைத்தும் உதவி கிடையாதா?.. திருநங்கைகள் வீடியோ வைரல்

 

நெல்லை: நெல்லை மாவட்டம், சுத்தமல்லி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிங்கநல்லூர் பகுதியில் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஒருவர் அடிக்கடி போதையில் வந்து திருநங்கைகளிடம் பிரச்னை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் அந்த நபர் குடிபோதையில் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த திருநங்கைகள், பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாரைத் தொடர்புகொள்ள போலீஸ் அவசர எண்ணில் அழைத்தனர்.

ஆனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்பு கொண்டும் போலீசாரை அழைக்க முடியவில்லை. இதையடுத்து, சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனினும் போலீசார் எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள், அவசர உதவிக்குக்கூட வராத போலீசாரின் மெத்தன போக்கைக் கண்டித்து, சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ‘‘சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி திருநங்கைகளுக்குக் கிடையாதா?’’ என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையே போலீசாருக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை என திருநங்கைகள் வீடியோ வெளியிட்டது தொடர்பாக நெல்லை மாவட்ட போலீசார் விளக்கம் அளித்தனர். அதில், ‘காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகராறு செய்ததாக எந்தப் புகாரும்வரவில்லை. அவசர அழைப்புகளில் புகார் வந்தால் போலீசார் கட்டாய நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றனர். திருநங்கைகளின் வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து சிங்கப்பெண் படை போலீசார் திருநங்கைகளிடம் சென்று விசாரணை நடத்தினர்.

Tags : Nellai ,Lion Guard ,Narasinghanallur ,Suttamalli ,Nellai district ,
× RELATED விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன்...