இடைப்பாடி: சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் பரூக் நகரை சேர்ந்தவர் செந்தில்பிரபு (47). இவரது மகள் அனுகீர்த்தனா (19). இவர் கடந்த 17ம் தேதி அதிகாலை, நீட் தேர்வு அச்சத்தால் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, உறவினர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அவர் அனுப்பிய மெசேஜில், `நான் நீட் தேர்வு எழுதி விட்டு மருத்துவக் கல்லூரியில் சேர காத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் தேர்வை ரத்து செய்து விட்டார்கள். இப்போது மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது’ என்று தெரிவித்திருந்தார். நீட் மரணம் என் மகளுடன் முடிய வேண்டும் என்று அவரது தந்தை கதறி அழுதார். இந்த சோகம் மறைவதற்குள், மீண்டும் இதுபோன்று ஒரு சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே ெகாங்கணாபுரத்தை அடுத்த வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (45) பியூட்டிசியன். இவரது மகள் கோபிகா (19). பிளஸ்-2 முடித்து விட்டு கடந்த 2 முறை நீட் தேர்வு எழுதினார்.
ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தொடர்ந்து, கோபிகா வீட்டில் இருந்தே நீட் தேர்வுக்கு இரவு பகலாக படித்து வந்தார். நடப்பாண்டு 3வது முறையாக நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து, கடந்த மே 3ம் தேதி கோபிகா நீட் தேர்வு எழுதினார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைத்தொடர்ந்து, நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ததாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த தேர்வில் கோபிகா நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடந்து, வரும் 21ம் தேதி (நாளை) நீட் மறுதேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. நீட் மறுதேர்வுக்கு கோபிகா தீவிரமாக தயாராகி வந்தார். ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் 4வது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இரவு பகலாக படித்து வந்ததில் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வில் சரியாக எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும், கடுமையான மன அழுத்தத்திலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் கோபிகா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோபிகா உயிரிழந்தார். தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. நீட் தேர்வு குளறுபடியால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் கூறுகையில், “3வது முறையாக நீட் தேர்வு நன்றாக எழுதி இருந்ததாக கோபிகா தெரிவித்தார். அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கடும் மனஉளைச்சலில் இருந்தார். நாங்கள் சமாதானப்படுத்தி வந்ேதாம். இருப்பினும் 4வது முறையாக தேர்வு எழுத, கோபிகா தயாரான நிலையில் தற்கொலை ெசய்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வினால் ஏராளமான மாணவ-மாணவிகள் உயிரிழந்து வருகின்றனர். மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்ெகாள்ள வேண்டும்,’’என்றனர்.
தேர்வு ரத்தானதே காரணம்: தாயார் வேதனை
மாணவியின் தாயார் புவனேஸ்வரி கூறுகையில், ‘‘நாங்கள் பெரியஅளவில் படிக்கவில்லை. குழந்தைகளை இதற்கு தான் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் இல்லை, ஆனால் டாக்டராக வேண்டும் என்பது எனது மகளின் கனவாக இருந்தது. படிப்பை தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. வாழப்பாடி பள்ளியில் உள்ள மையத்தில் தேர்வெழுத ஹால்டிக்கெட் கூட வாங்கி வைத்துவிட்டோம். 3ம்தேதி ரத்தான தேர்வை நல்லமுறையில் எழுதி இருந்ததாக கூறி, நம்பிக்கையுடன் இருந்தார். அந்த தேர்வு ரத்துசெய்யப்பட்டது அவருக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது என்பதை உணர்ந்து கொண்டோம். ஆனாலும் உறுதியுடன் படித்த மகள், தற்கொலை செய்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை,’’ என்றார்.
என் பொண்ணே கடைசியா இருக்கட்டும்… தந்தை உருக்கம்
மாணவி தந்தை சேகர் கூறுகையில், ‘‘எனது மகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சொந்த ஊரிலேயே மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கடந்த 3ம் தேதி குளறுபடியால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் 21ம் தேதி நடக்கும் தேர்வை எழுத தயாராகி வந்தார். இதற்காக அவர், வீட்டில் மிகுந்த சிரத்தை எடுத்து படித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வால் தமிழகத்தில் தொடர்ந்து மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.
அதுபோன்ற தகவல்களை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கும். ஆனால் இன்று எனது மகளே, நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துள்ளதால் நொறுங்கி போயுள்ளோம். எனது மகளின் இறப்பு தான், தமிழகத்தில் நீட் பயத்திற்கான கடைசி இறப்பாக இருக்க வேண்டும். இனிஎந்தவொரு மாணவ, மாணவிக்கும் இந்தநிலை வரக்கூடாது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வே தேவையில்ைல என்பதே, என்போன்ற ஒட்டுமொத்த பெற்றோரின் மனநிலையாக உள்ளது,’’ என்றார்.
