கோவை: கோவை மாவட்டம் நீலம்பூர் அருகே தனியார் பேருந்து நிலை தடுமாறி பாலத்தின் மீது சாய்ந்ததில் 20 பயணிகள் காயமடைந்தனர். திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து நீலம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. பேருந்து அதிவேகமாக வந்ததால் பாலம் ஏறும் திருப்பத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறமாக இருந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பலத்து சாய்ந்திருக்கிறது.
இந்த விபத்தில் பேருந்தின் இடதுபுறம் அமர்ந்திருந்த மற்றும் இடிபாடுகளில் சிக்கிய சுமார் 20 பயணிகள் லேசான மற்றும் பலத்த காயமடைந்தனர். விபத்து சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து காரணமாக திருப்பூர் – கோவை சாலையில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
