×

அழகியபாண்டியபுரம் வனச்சரகத்தில் பலாப்பழ சீசனில் உலா வரும் யானை, கரடிகள்

*தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் பயனில்லை

* தொழிலாளர்கள் பரிதவிப்பு

பூதப்பாண்டி : அழகியபாண்டியபுரம் வனச்சரக பகுதிகளில் சீசன் காலத்தில் வரும் யானை, கரடிகளால் தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும்.

இதில் தோவாளை வட்டம் அழகியபாண்டியபுரம் வனச்சரகத்தில் வேளிமலை, காளிகேசம், மாறாமலை உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க பகுதிகளாக உள்ளன. மிகவும் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, சிங்கவால் குரங்குகள், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன.

அழகியபாண்டியபுரம் வனச்சரக பகுதியில் அரசுக்கு சொந்தமான 9 ரப்பர் தோட்டங்களும், தனியாருக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட ரப்பர் தோட்டங்களும் உள்ளன. மேலும் அதிகளவில் கிராம்பு மற்றும் ஏலக்காய் எஸ்டேட்களும் உள்ளன. இந்த ரப்பர் தோட்டங்கள் மற்றும் எஸ்டேட்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினந்தோறும் சென்று வேலை செய்து வருகின்றனர்.

ரப்பர் மரங்களில் பால் வெட்டுவது, கிராம்பு, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் களை எடுப்பது தொழிலாளர்களின் முக்கிய வேலையாக உள்ளது. மேலும் இவர்களது முக்கிய வாழ்வாதாரமாக இந்த தொழில்களே உள்ளன.

இதற்கிடையே வனப்பகுதியில் உள்ள தோட்டங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கை திக்… திக்.. என பீதி கலந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணமாக விளங்குவது வன விலங்குகள் தான். அதிலும் காட்டு யானை, கரடி தான் அடிக்கடி மலையில் இருந்து வெளியேறி தோட்டம் மற்றும் எஸ்டேட்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆண்டு முழுவதும் எப்போது வேண்டுமானாலும் யானை, கரடி வரும் என்று கூறப்பட்டாலும் குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் சக்கப்பழம் என அழைக்கப்படும் பலாப்பழ சீசன் சமயத்தில் தான் அதிளவில் வருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் தொழிலாளர்கள் செல்லும் வழியில் உள்ள புதருக்குள் மறைந்திருந்து பின்னர் தொழிலாளர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

குறிப்பாக கடந்த ஆண்டு பலாப்பழ சீசன் காலத்தில் கரடிகளை காட்டிலும் யானைகள் அதிகளவில் மலையில் இருந்து வெளியேறி தோட்டங்களுக்கு வந்தன. இவ்வாறு வந்த யானைகள் சீசன் முடிந்த பின்னரும் தற்போது வரை வனப்பகுதிக்குள் செல்லாமல் மலையடிவார பகுதிக்குள் சுற்றி வருகின்றன.

கடந்த ஆண்டு வந்த 3 யானைகளில் ஒரு யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு பூதப்பாண்டி அருகே வேலைக்கு சென்ற தொழிலாளியின் வயிற்றில் குத்தியதில் படுகாயம் அடைந்தார். மேலும் இந்த 3 யானைகள் அழகியபாண்டியபுரம் வனச்சரகத்தில் தெள்ளாந்தியில் தொடங்கி அருமனை சுற்றியுள்ள மலையோல பகுதி வரை சென்று வருவதாக தொழிலாளர்கள் கூறினர்.

இதற்கிடையே தொழிலாளர்கள் கூறியதை நிரூபிக்கும் வகையில் அருமனை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை தாக்கியதில் மதபோதகர் உயிரிழந்தார். இந்த 3 யானைகளும் தற்போது வரை மலையடிவாரத்தில் சுற்றி வருவதால் ரப்பர் மற்றும் கிராம்பு தொழிலாளர்கள் தினந்தோறும் ஒருவித அச்சத்துடனயே சென்று வருகின்றனர்.

இதற்கிடையே வனவிலங்குகள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து எந்த வழியிலாவது யானை, கரடி வருவதால் ரப்பர் தொழிலாளர்களின் கவலை தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், தெள்ளாந்தி முதல் அருமனை வரை உள்ள மலையடிவார பகுதியில் சுற்றித்திரியும் 3 யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த யானைகள் தாக்கி தான் ஒருவர் உயிரிழந்துவிட்டார். ஒருவர் படுகாயம் அடைந்தார். எனவே தொழிலாளர்களை அச்சுறுத்தும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிலாளர்கள் செல்லும் பாதைகளில் வளர்ந்துள்ள புதர் மற்றும் செடி கொடிகளை அகற்ற வேண்டும் என்றனர்.

பலா மரங்களை குறிவைக்கும் கரடிகள்

அழகியபாண்டியபுரம் வனச்சரகத்தில் உள்ள எஸ்டேட் மற்றும் தோட்டங்களில் மா, தென்னை மரங்களுக்கு ஈடாக அதிகளவில் பலப்பழ மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாத பலா சீசனில் பலாப்பழ வாசனையை வைத்து கரடிகள் தோட்டங்கள் மற்றும் எஸ்டேட்களுக்கு வருவது வழக்கம்.

இவ்வாறு வரும் கரடிகள் மனிதர்கள் வந்தால் புதருக்குள் மறைந்திருந்து பின்னர் தொழிலாளர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.குறிப்பாக தொழிலாளர்களின் முகத்தை சிதைக்கும் வகையில் தாக்கும் கரடிகள் பலாப்பழ சீசன் முடியும் வரை அட்டகாசத்தை தொடர்கிறது. இதனால் யானையை போன்று கரடிகளின் அச்சத்தாலும் தொழிலாளர்கள் பாதிக்ப்பட்டு வருகின்றனர்.

வனத்துறைக்கு கைகொடுக்காத அகழிகள்

அடர்ந்த வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் மலையடிவார பகுதிக்கு வருவதை தடுக்க வனத்துறையினரின் முக்கிய முயற்சியாக அகழிகள் வெட்டி தடுப்பது இருந்து வருகிறது. வனச்சரகத்துக்குட்பட்ட யானைகள் வரும் இடங்களில் வனத்துறையினர் அகழிகள் வெட்டினாலும் அடுத்தடுத்த மழைக்காலங்களில் அகழிகளுக்குள் தண்ணீர் புகுந்து அகழிகள் மூடிவிடுகின்றன. இதனால் அகழிகள் வெட்டி யானைகளை தடுக்கும் முயற்சி வனத்துறையினருக்கு கைகொடுக்காத ஒன்றாகவே இருந்து வருகிறது.

Tags : Alagiyapandiyapuram forest reserve ,Boothapandi ,Western Ghats ,Kanyakumari district ,
× RELATED ஓசூர் மாநகரை சுற்றிலும் புதிய...