சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே திருச்சி வழியாக ஜூன் 20-ஆம் தேதி நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06043) சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5.35 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர் 5.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 21-ஆம் தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (எண்-06044) மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 5.40 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர் 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இந்த ரயில் இருமார்க்கங்களிலும் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் மற்றும் நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 2 ஏசி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்படும்.
சென்னை எழும்பூர் – செங்கோட்டை (06183), செங்கோட்டை-தாம்பரம் (06184) வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு இருமார்க்கத்திலும் அதிராம்பட்டினம், மானாமதுரை ஆகிய இரண்டு கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி இந்த ரயில்கள் மேற்கண்ட இரண்டு ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
