புதுச்சேரி, ஜூன் 19: புதுச்சேரி குமரகுருபள்ளம் அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சத்யா(எ) தகுடு சத்யா(எ) ஸ்டீபன்ராஜூ(38). இவர் மீது கொலை, வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன், கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் சத்யா கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இவர் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் இவரது நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சத்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள சத்யாவிடம், இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
