×

குளறுபடி காரணமாக ரத்து செய்யப்பட்டதால் கோவையில் அதிர்ச்சி; நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை: பெற்றோர், உறவினர்கள் கதறல்

கோவை: நீட் தேர்வு அச்சத்தால் கோவை மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை குனியமுத்தூர் பரூக் நகரை சேர்ந்தவர் செந்தில்பிரபு (47). இவர், கோவை சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளராகவும், மார்க்சிஸ்ட் கம்யூ. மேற்கு நகர குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் அனுகீர்த்தனா (19). இவர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்விற்காக பயிற்சி வகுப்புக்கு சென்று தயாராகி வந்தார். அனுகீர்த்தனா 2 முறை நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. கடந்த முறை எழுதிய நீட் தேர்வும், வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அனுகீர்த்தனா மனவேதனை அடைந்தார். இருப்பினும், நீட் மறுதேர்வுக்காக அவர் தயாராகி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அனுகீர்த்தனா நீட் தேர்வு குறித்த அச்சத்திலும், கடுமையான மன அழுத்தத்திலும் இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று அதிகாலை வீட்டில் இருந்த அவர், நீட் தேர்வு குறித்து நினைத்து பதற்றத்தில் இருந்தார். இதனால், அவர் தலைவலி தைலத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மயங்கி கிடந்த அனுகீர்த்தனாவை மீட்டு உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த மாணவியின் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை இ.எஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது. நீட் தேர்வு குளறுபடிகளால் கோவையில் மாணவியின் மருத்துவக்கனவு தற்கொலையில் முடிந்துள்ள சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடைசி மெசேஜில் உருக்கம்
அனுகீர்த்தனா நேற்று அதிகாலை தனது சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு நீண்ட உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், “நான் நீட் தேர்வு எழுதி விட்டு மருத்துவக் கல்லூரியில் சேர காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், தேர்வை ரத்து செய்து விட்டார்கள். இப்போது, மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது. அப்பா எனக்காக நிறைய செலவு செய்து விட்டார், இனிமேல் குடும்பத்தினர் முகத்தில் நான் எப்படி? விழிப்பேன் என்று தெரியவில்லை” என தெரிவித்திருந்தார்.

நீட் மரணம் என் மகளுடன் முடிய வேண்டும் அதிகாரிகளிடம் கதறி அழுத தந்தை
அனுகீர்த்தனா தற்கொலையால் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு தரையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்ட கட்சியினர், மாணவியின் குடும்பத்தினர், நண்பர்கள் திரண்டனர். அவர்களிடம் கோவை தெற்கு ஆர்.டி.ஓ. மாருதிப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இறந்த மாணவியின் தந்தை செந்தில் பிரபு அதிகாரியிடம் அழுதுகொண்டே நீட் தேர்வு மரணம் அனிதாவில் தொடங்கி, எனது மகளின் மரணத்துடன் முடிய வேண்டும். கோச்சிங் சென்டர் வருவாய் பெற தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்றார். இது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

இதேபோல், கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி நேற்று மாவட்ட தலைவர் பாவெல் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Coimbatore ,Senthilprabhu ,Kuniyamuthur ,Farooq Nagar ,CITU TASMAC ,Marxist Communist ,West City Committee ,
× RELATED தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்...