×

இரண்டாம் கட்ட பயிர்க்கடன் தள்ளுபடியும் ஏமாற்று வேலை; தமிழ்நாடு முழுவதும் 22ம் தேதி உண்ணாவிரதம், போராட்டம்: சங்க தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

திருச்சி: தமிழகத்தில் 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கு பாதி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் அறிவிப்புக்கு மாறாக ரூ.50 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மறியல், முற்றுகை போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளின் போராட்டத்துக்கு தமிழக அரசு பணிந்து, ரூ.75,000 வரை பெற்றவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ரூ.75,000த்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35,000 வரை கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கும் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்: பயிர்கடன் அறிவிப்பு யானை பசிக்கு சோளப்பொறி போன்றதாகும். நம்பிக்கை துரோகம் செய்வது போல், சூதாட்டம் போல் மாறி மாறி கடன் தள்ளுபடி என்கிற பெயரில் விவசாயிகளை வயிற்றில் அடிப்பதை ஏற்க இயலாது. காவிரி டெல்டாவில் நடப்பாண்டு குறுவை சாகுபடியை முற்றிலும் இழந்துள்ளோம். இதனால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு வாழ்வதா, சாவதா என்கிற நிலை உள்ளது. சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்குமா என்கிற ஏக்கத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழக முதல்வரின் கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றும் வகையில் உள்ளதால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து முதல்வர் மறுபரிசீலனை செய்து தேர்தல் வாக்குறுதியின்படி கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழக கடைமடை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கமல்ராம்: பயிர்கடன் தள்ளுபடி குறித்த முதல்வரின் 2ம்கட்ட அறிவிப்பு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இந்த புதிய தள்ளுபடி அறிவிப்பால் பயிர்கடன் பெற்ற 7,32,396 சிறுகுறு விவசாயிகள் முழுமையான கடன் தள்ளுபடி பெற முடியாமல், பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதல்வர் தனது தேர்தல் உத்தரவாதத்தை மறந்து மீண்டும் விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேட்டூர் அணையை உரிய காலத்தில் திறக்காததால் குறுவை சாகுபடியை இழந்த நிலையில் பயனற்ற குறுவை தொகுப்பு போன்றவற்றால் பொருளாதார நெருக்கடியை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். முழுமையான பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் தமிழ் செல்வன்: முதல்வர் அறிவித்துள்ள பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்று வேலை. இந்த 2 அரசாணையையும் திரும்ப பெற்று நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன், நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். முதல்வர் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். முதல்வருக்கு போதிய அனுபவம் இல்லாததால் அமைச்சர்கள் சொல்வதை கேட்டு கேட்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார். அதனால் தான் இதுபோன்ற குளறுபடியான அறிவிப்புகள் வெளிவருகிறது. முழுமையாக கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் வரும் 22ம்தேதி தமிழக முழுவதும் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

Tags : Tamil Nadu ,Sangam ,Trichy ,TAVEG ,Vijay ,
× RELATED தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்...