×

நடிகை கவுதமியின் ரூ.25 கோடி சொத்துக்களை அபகரித்த வழக்கு பைனான்சியர் அழகப்பனுக்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: ஆஸ்திரேலியாவில் சொத்துக்கள் வாங்கி குவித்த ஆவணங்கள் சிக்கியது

சென்னை: நடிகை கவுதமியிடம் ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக அபகரித்த வழக்கு தொடர்பாக, பைனான்சியர் அழக்கப்பனுக்கு சொந்தமான சென்னை, மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆஸ்திரேலியாவில் வாங்கி குவித்துள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை கவுதமி கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 2004ம் ஆண்டு தனக்கு புற்றுநோய் ஏற்பட்ட காரணத்தால் எனது 4 வயது மகளின் எதிர்க்காலத்திற்காக அனைத்து சொத்துக்களையும் விற்பனை செய்ய, நெருங்கிய நண்பரும் பைனான்சியருமான அழகப்பன் என்பவரை நான் பவர் ஏஜென்டாக நியமித்தேன்.

ஆனால் அவர், தனது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா அழகப்பன் (எ) சதீஷ், மகள் ஆர்த்தி அழகப்பன் மற்றும் உறவினர்களான பாஸ்கர், ரமேஷ் சங்கர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கடந்த 2015-16ம் ஆண்டு பெரும்புதூரில் உள்ள எனது 10.63 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் அவர் எனது வங்கி கணக்கில் ரூ.58 லட்சம் மற்றும் ரூ.4.20 லட்சம் மட்டும் வரவு வைத்துள்ளார். மீதமுள்ள பணத்தை அழகப்பன் அவரது குடும்ப உறுப்பினர் பெயர்களில் உள்ள வங்கி கணக்கில் மாற்றிவிட்டார். அதேபோல், கடந்த 10.2.2021 அன்று, ராமநாதபுரத்தில் உள்ள எனது 8.23 ஏக்கர் நிலத்தை அழகப்பன் தனது மகன் சிவா அழகப்பன், மகள் ஆர்த்தி அழகப்பன் பெயரில் பதிவு செய்து கடந்த 20.10.2015ம் ஆண்டு விற்பனை ஆவணத்தை மாற்றி எனது சொத்துக்களை ஏமாற்றி பறித்துக் கொண்டார்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்ததில் ரூ.7 கோடியை அவரது கூட்டாளியான அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் பலராமன் உள்ளிட்டோருடன் சேர்ந்து ஏமாற்றிவிட்டார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் பைனான்சியரான அழகப்பன் நடிகை கவுதமியின் சொத்துக்கள் அபகரித்தது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் அழகப்பன், அவரது மனைவி, மகன், மகள், மோசடிக்கு உதவிய தொழிலதிபர் பலராமன் உள்ளிட்டோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் அழகப்பன் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் ெசய்யப்பட்டுள்ளது. அதேநேரம் நடிகை கவுதமியின் சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.25 கோடி பணத்தை அழகப்பன் வெளிநாட்டில் பணியாற்றி வரும் அவரது மகன் சிவா (எ) சதீஷ் மூலம் ஆஸ்திரேலியாவில் சொத்துக்களை வாங்கி உள்ளதும், அவரது மகள் ஆர்த்தி பெயரிலும் சொத்துக்கள் வாங்கியதும் விசாரணையின் மூலம் தெரியவந்தது. சட்டவிரோதமாக பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டதால் இந்த மோசடி வழக்கில் அமலாகத்துறை தனியாக விசாரணையில் இறங்கி உள்ளது.

அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக ரூ.25 கோடி வரை பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதால் நடிகை கவுதமி சொத்துக்களை அபகரித்த அழகப்பன், அவரது மனைவி, மகன், மகள் தொழிலதிபர் பலராமன் தொடர்பான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை அண்ணாநகரில் அழகப்பன் நண்பரான தொழிலதிபர் பலராமன் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள அழகப்பன் வீடு மற்றும் சிவகங்கை, மதுரை, காரைக்குடி என 6 இடங்களில் தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துணையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அழகப்பன் வீட்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் மகன் பெயரில் சொத்துக்கள் வாங்கிய ஆவணங்கள், மகள் ஆர்த்தி பெயரில் வீட்டு மனைகள், விவசாய நிலங்கள் வாங்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இந்த சோதனை முடிந்த பிறகு தான் முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Enforcement Directorate ,Alagappan ,Gautami ,Australia ,Chennai ,Madurai ,
× RELATED தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்...