×

மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பொதுமக்கள் மற்றும் தொழில் துறையை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், மின்கட்டண உயர்வு பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்கும், என்று எரிசக்தித் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அது வெறும் பெயரளவிலான உறுதிமொழியாக இல்லாமல் செயல்முறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், தொழில்துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எந்தவொரு மின்கட்டண உயர்வும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையே பாதிக்கும். மின்சார வாரியத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக பொதுமக்கள் மற்றும் தொழில்துறையின் மீது சுமையை ஏற்றுவதற்குப் பதிலாக, மின்விநியோக இழப்புகளை குறைத்தல், வசூல் திறனை மேம்படுத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் நிர்வாகச் செலவுகளை கட்டுப்படுத்துதல் போன்ற மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை காரணம் காட்டி மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவை முழுமையாக கைவிட்டு, பொதுமக்கள், சிறு வணிகர்கள், குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு மின்கட்டண உயர்வு இல்லாத கொள்கையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

மின்கட்டண உயர்வைத் தவிர்ப்பதே பொதுமக்களை விலைவாசி உயர்விலிருந்தும், தொழிலாளர்களை வேலை இழப்பிலிருந்தும், தொழில் துறையை நெருக்கடியிலிருந்தும் காப்பதற்கான சிறந்த வழியாகும் என்பதை தமிழக அரசு உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Ramadoss ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 1 முதல் செல்போனுக்கு தடை!!