நன்றி குங்குமம் தோழி
பதினைந்து திரைப்படங்களில் மட்டுமே நடித்த நடிகை.நூறாண்டுகளை கடந்தும், நினைவில் வாழ்பவராக மட்டுமே இருக்கும் நிலையிலும் இன்றைக்கும் பலராலும் நினைக்கப்படுகிறார்; பேசப்படுகிறார். அவர் நடித்த படங்கள், அவரது நடனம், பாடல்கள் என அனைத்தும் கொண்டாடப்படுகின்றன. கவர்ச்சிக்கன்னி என்றும் அவரைக் கொண்டாடி சிலாகித்துப் பேசுகிறவர்களும் இருக்கிறார்கள். பிரபலமாக அறியப்பட்ட நாயகியர் பலரும் என்றும் நினைவுகூரத்தக்கவர்களாகவே இருக்கிறார்கள். செல்லுலாய்ட் நாயகியர் நிகழ்த்தும் ரசவாதம் எப்போதும் எக்காலத்திலும் ஒரே மாதிரியானவைதான்!
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 1930, 40களில் நடிக்க வந்த நாயகிகள் முதல் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நடிகையர் வரை பல்வேறு நடிகையர் கனவுக்கன்னிகளாகக் கொண்டாடப்பட்டவர்கள். அவர்களில் டி.ஆர்.ராஜகுமாரி முதலிடம் வகித்தவர். அவரது சம காலத்திலேயே மற்றும் ஒரு கனவுக்கன்னியாகக் கொண்டாடப்பட்டவராகவும் கே.எல்.வி. வசந்தா இருந்துள்ளார் என்பது அவரது சிறப்பு.
நடனப் பெண்ணாகத் திரையில் அறிமுகம்
காரைக்குடியை அடுத்த குன்றக்குடி லட்சுமி அம்மாளின் மகள் வள்ளிக்கண்ணு. ஆம்! இதுவே கே.எல்.வி.வசந்தாவின் இயற்பெயர். இசைக் குடும்பத்தின் பின்னணியில் பிறந்து வளர்ந்தவரான வசந்தாவுக்கு இளம் வயதிலேயே இசையும் நடனமும் நன்கு அறிமுகமாகியிருந்தது. இனிய குரல் வளமும் நாட்டியத் திறனும் சேர்ந்து அவருக்கு நாடகத்தில் நடிக்கும் விருப்பத்தை ஏற்படுத்த, நாடக நடிகையாக மாறியதால் பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்று போனது.
தமிழ்த் திரையுலகின் ஆரம்ப கால முன்னோடி இயக்குநராக அறியப்படும் கே.சுப்பிரமணியம் 1934 ஆம் ஆண்டில் இயக்கிய ‘பவளக்கொடி’ படத்தில், நாடக உலகில் கொடி கட்டிப் பறந்தவர்களான எம்.கே.தியாகராஜ பாகவதர் மற்றும் எஸ்.டி.சுப்புலட்சுமி இருவரையும் அறிமுகப்படுத்தினார். திரைப்படத்துக்குப் புதியவர்களான இவர்கள் இருவரும் தாங்கள் இணைந்து நடித்த நாடகங்களின் வாயிலாகவே மக்கள் திரளின் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட ஜோடி ஆவார்கள்.
இருவரும் இணைந்து நடித்ததால் படமும் நன்றாகவே ஓடி வசூலைக் குவித்தது. இவர்களைத் தவிர மற்றொரு புதுமுகமான கே.எல்.வி.வசந்தாவும் இப்படத்தில் நடனப் பெண்ணாகத் தோன்றி நடனமாடினார். கே.சுப்பிரமணியம் மிகுந்த தயக்கத்துடனே இவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதனால், டைட்டிலில் வசந்தாவின் பெயரும் இடம் பெறவில்லை. வயதில் மிகவும் சிறு பெண்ணாகவும் இருந்ததால், அந்தத் தயக்கம் கே.சுப்பிரமணியத்துக்கு இருந்தது.
‘பவளக்கொடி’ படத்துக்குப் பின் தொடர்ச்சியாக மேலும் சில படங்களில் நாட்டிய நாடகத்தில் பங்கேற்று ஆடும் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து வந்துள்ளன. அதன் பின்னர் தன் விடா முயற்சியாலும் தொடர்ந்து மேற்கொண்ட இசை, நடனப் பயிற்சிகளாலும் மட்டுமே முன்னணி நடிகையாக வசந்தா உயர்ந்திருக்கிறார். அக்காலத்தில் ‘பவளக்கொடி’ நாடகத்தைப் பார்க்கவே மக்கள் கூட்டம் திமிறும். அதே நாடகம் திரைப்படமாகவும் வெளியாகி, தங்கள் அபிமான நடிக, நடிகையரும் அதில் நடிக்கிறார்கள் என்பதால் ’பவளக்கொடி’ திரைப்படமும் மிகப் பிரமாதமாக ஓடியது. ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்பட்ட ‘பவளக்கொடி’ திரைப்படம் 250 நாட்களை கடந்து ஓடி வெள்ளி விழாவையும் கண்டது.
கவர்ச்சிகரமான தோற்றப்பொலிவுடன் இருந்ததால், ரசிகர்களை கவரும் கலைஞராகவும் வசந்தாவால் மாற முடிந்தது. பொதுவாக, வசந்தா உயரம் குறைந்தவர் என்று சொல்லப்பட்டாலும் நடிகைகள் பெரும்பாலும் அதனால் புறக்கணிக்கப்பட்டதில்லை என்பதையும் சினிமா வரலாறு நமக்கு சேர்த்தே சொல்கிறது. அவ்வாறு உயரம் குறைந்தவர்கள் என்று சொன்னால் பலப் பல நடிகையர் நம் மனக்கண்ணின் முன்பாக அணிவகுத்து நிற்பார்கள். அவர்கள்தாங்கள் ஏற்று நடித்த பாத்திரங்களின் வாயிலாக எப்போதும் நினைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
முதன்முதலில் வசந்தா நாயகியாக நடித்த படம் ‘கந்த லீலா’ என்று அக்காலத்து சினிமா செய்திகளை ’வெடிகுண்டுகளாகவும்’ பிரசுரித்த ‘குண்டூசி’ பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆனால், இல்லை என மறுப்பவர்களும் உண்டு. ஏனெனில் அக்காலத்தில் ஒரே பெயரில் பல நடிகையர் இருந்ததால் எந்த வசந்தா நாயகியாக நடித்தார் எனக் குறிப்பிட இயலாது என்று மூத்த சினிமா பத்திரிகையாளர்களும் கூறுகிறார்கள்.
வரலாறு படைத்த மதன காமராஜன்
’ஆனந்த விகடன்’ பத்திரிகையாசிரியரான எஸ்.எஸ்.வாசன், இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் ஸ்டுடியோவை வாங்கி ‘ஜெமினி ஸ்டுடியோ’ எனப் பெயரிட்டுத் தயாரித்த முதல் படம் ‘மதன காமராஜன்’. 1941 ஆம் ஆண்டில் அமிர்தம் டாக்கீஸாருக்காக தயாரிக்கப்பட்டது இப்படம். அந்தக் காலத்திலேயே இப்படம் ஆறு மாதங்களுக்கு ஓடி ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்திருக்கிறது என்றால் அதன் வலிமையை பார்த்துக் கொள்ளுங்கள். அகன்ற விழிகளோடும் வசீகரம் மிக்க புன்னகையோடும் இப்படத்தின் வழியாக ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் அக்கால ரசிகர்களின் கனவுக்கன்னியான வசந்தா என்றால் அது சற்றும் மிகையல்ல.
இவர் நடித்த படங்கள் பற்றி அறிந்திருந்தபோதும், பத்தாண்டுகளுக்கு முன் ‘பனுவல்’ புத்தகக் காட்சி அரங்கில் திரையிடப்பட்ட ‘மதன காமராஜன்’ திரைப்படத்தில் அவரைப் பார்த்த கணம் அவ்வளவு ஈர்க்கக்கூடியதாக இருந்தது. பின்னர் டிவிடியை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு பலமுறை பார்த்து ரசிக்கவும் முடிந்தது. அவருடைய மற்ற திரைப்படங்கள் ஏதும் கிடைக்குமா என்று தேடியதில் வேறு எதுவும் எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. ஃபாண்டஸி வகைமையில் அடங்கும் இப்படத்தின் கதை, காட்சி அமைப்பு என எங்கும் தொய்வு என்பதே இல்லாமல் விறுவிறுப்பாக விரைந்து செல்லும் கதையமைப்பு.
மாயாஜாலங்கள், மன்னர் காலத்து நடைமுறைகள், அரச குமாரன், மந்திரி குமாரன் இருவரின் அடர்த்தியான நெருக்கமான நட்பு, அரச குமாரனை விரும்பும் ராஜ குருவின் மகள், குருவின் மகளை காதலிக்கும் சீடன், குருவும் அவர் மகளும் அதை விரும்பாததால் சீடனுக்கு குரு அளிக்கும் சாபம், சாபத்தின் விளைவு, முகம் சுளிக்க வைக்காத நகைச்சுவை என எல்லாமும் கலந்த ஒரு கலவையான அபாரமானதொரு திரைப்படம். பார்க்கச் சலிக்காத மூன்று மணி நேரத் திரைப்படம்.
எனக்கு பத்தாண்டுகளுக்கு முன் அவ்வளவு எளிதில் கிடைக்காத இப்படம் இன்றைக்கு யூட்யூபில் கிடைக்கிறது. இந்தப் படம் மட்டுமல்ல, இன்னும் பல அற்புதமான கிளாசிக் வகையிலான படங்களும் காணக் கிடைக்கின்றன. இப்படத்தில் நான்கு பிரதான பெண் கதாபாத்திரங்கள். ராஜ குருவின் மகள் (எம்.எஸ்.சுந்தரிபாய்), அரச குமாரன் மதன காமராஜன் மனைவி ( கே.ஆர்.செல்லம்), மந்திரி குமாரன் மனைவி (எம்.வி.ராஜம்மா), அடுத்து படம் ஆரம்பித்து சற்றுத் தாமதமாகவே திரையில் தோன்றுபவர் இளவரசியான பிரேம வல்லியான நம் நாயகி (கே.எல்.வி.வசந்தா). பிற்காலத்தில் நம் சமகால நடிகையான சித்தாராவின் சாயல், வசந்தாவின் சிரிப்பில் தென்படுகிறது என்பதும் கூடுதல் சுவாரசியம்.
ஒரு கோயிலின் சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள மாடங்களில் அழகான ஒரு பெண்ணின் ஓவியங்கள் பலவும் இடம் பெற்றிருக்கின்றன. தலைமறைவாக இருப்பதற்காக இந்த நாட்டுக்கு வரும் அரசகுமாரனும், மந்திரிகுமாரனும் கோயிலில் இருக்கும் அந்த ஓவியத்தை பார்க்க நேரிடுகிறது. அதைப் பார்த்த மாத்திரத்தில் அரசகுமாரன் தன் உணர்விழந்து மயங்கிக் கீழே சாய்கிறான். இனி, அந்த ஓவியத்திலிருக்கும் பேரழகியே நேரில் வந்து அழைத்தால்தான் அரச குமாரன் தன் உணர்வு பெற்று எழுவான் என்பதை உணர்ந்த மந்திரிகுமாரன், தன் நண்பனை பாதுகாப்பான ஓர் இடத்தில் தங்க வைத்துவிட்டு, பேரழகியான அந்த அழகியை தேடிச் செல்வது மற்றொரு சுவாரசியம்.
பல்வேறு இன்னல்களுக்கிடையில் அவள் ஓர் அரசகுமாரி என்பதும், அவளை கண்டுபிடித்து அழைத்து வந்து, சுவரிலிருக்கும் மாடத்தில் கையில் மலர் மாலையுடன் அவளை சித்திரம் போல் நிற்குமாறு கூறிவிட்டு, அரசகுமாரனை அழைத்து வரச் செல்வதும் மேலும் மேலும் ஆச்சரியங்களை ஏற்படுத்துபவை. கையில் மலர்மாலையுடன் சொக்க வைக்கும் அழகோடு சுவரில் ஓவியம் போல் நிற்கும் அரசகுமாரியை பார்த்து, படம் பார்க்கும் பார்வையாளர்களான நாமும் மயங்கி விழுந்து விடும் பேரழகோடு அத்தனை வசீகரத்துடன் அக்காட்சியில் தோன்றுவார் கே.எல்.வி.வசந்தா.
வசந்த கால ரதி-மன்மதன் நாட்டியம்!
படத்தின் அறிமுகக் காட்சியிலேயே ரதி-மன்மதன் நாட்டிய நாடகத்தில் ரதியாக வசந்தா ஆடுகிறார். உண்மையிலேயே அதி அற்புத அழகு வாய்ந்த ரதி போன்ற நடிகைதான் அவர். இனிமையான சொந்தக் குரலிலும் பாடுகிறார். வேறு சில பாடல்களையும் சற்றும் பிசிறின்றி உச்சஸ்தாயியில் பாடுகிறார்.மலர்களையும் வண்ணங்களையும் ஒருவர் மீது ஒருவர் வீசித் தெளித்து விளையாடும் வசந்த காலக் கொண்டாட்டப் பண்டிகையான ஹோலியின் போது, ரதியும் மன்மதனும் எவர் கண்களுக்கும் தெரியாதவண்ணம் உற்சாக மிகுதியில் ஆடிப் பாடுவார்கள் என்பது இதன் தாத்பர்யமாகவும் சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு கொண்டாட்டக் களிப்பில், தியானத்தில் மூழ்கியிருக்கும் சிவபெருமான் முன்பாக இருவரும் ஆடுகிறார்கள்.
சற்றே எல்லை மீறி மன்மதன் கரும்பு வில்லைப் பூட்டி காமக்கணையை சிவபெருமான் மீது செலுத்துகிறான். அந்த அதிர்வால் தியானம் கலைந்து போன நிலையில், கோபத்தின் உச்சிக்குச் சென்ற சிவன் நெற்றிக் கண்ணைத் திறக்க கண நேரத்தில் தீயின் வெப்பத்தில் சாம்பலாகிறான் மன்மதன். ரதியின் பணிவான வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் மீண்டும் அவனை உயிர்ப்பித்து நடமாட விடுகிறான்.
இந்த நாட்டிய நாடகத்தை அரசகுமாரியும் அவளின் தோழியரும் மன்னருக்கும் மக்களுக்கும் முன்பாக ஆடிக் காண்பிக்கிறார்கள். பொதுவாகவே அப்போது வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களில் இத்தகைய நாட்டிய நாடகங்கள் தவறாமல் இடம் பெற்றன. நன்றாக ஆடத் தெரிந்த நாயகியரானால் கண்டிப்பாக இவை இடம் பெறுவதும் தவிர்க்க முடியாததாக இருந்தது. லலிதா, பத்மினி, குமாரி கமலா என பலரின் நாட்டிய நாடகங்களையும் நாம் பல படங்களில் பார்த்து ரசித்திருக்கிறோம்.
இந்த நேரம் தவிர்த்துப் பிற நேரங்களில் அரசகுமாரியை யாரும் நேரில் காண முடியாது. அந்தப்புரமும் ஆற்றங்கரையும் மட்டுமே அவளுக்காக அனுமதிக்கப்பட்ட இடங்கள். ஆற்றங்கரைக்கும் கூட பிறர் கண்களில் படாதவாறு சுரங்கத்தின் வழியாகவே தோழிகளுடன் சென்று வர வேண்டும். இப்படியான அதீத கெடுபிடிகளுடன் வளர்க்கப்படுபவள் அரசகுமாரி பிரேமவல்லி. ஆனால், இத்தகைய கெடுபிடிகளையும் கடந்து அவள் கோயில், ஆற்றங்கரைகளில் மிகவும் சுதந்திரமாகவே நடமாடுகிறாள். உண்மையிலேயே ஓர் அரசகுமாரியை ஒத்த தோற்றப்பொலிவுடனே இப்படத்தில் ஜொலிக்கிறார் வசந்தா.
ரம்பையின் காதலும் பூலோக ரம்பையும்!
1939 ஆம் ஆண்டுக்குப் பிறகே திரைஉலகில் இவருக்கான வாய்ப்புகள் வரத் தொடங்கின. இயக்குநர் பி.என்.ராவ் அவர்களின் கண்களில் பட்டு ‘ரம்பையின் காதல்’ (1939) படத்தின் நாயகியாக மாறினார். கதாநாயகனாக நகைச்சுவை நடிகர் சாரங்கபாணி நடித்தார். நகைச்சுவைப் படமானதால், சென்னையில் 15 வாரங்கள் பிரமாதமாக ஓடியது. வசந்தா ரம்பையாக நடித்ததாலும் அவரது பாடலும் நடனமும் எல்லோரையும் கவர்ந்திழுத்தாலும் வசந்தாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. சாரங்கபாணியின் நகைச்சுவையும் சேர்ந்து ரசிகர்களை ஈர்த்தன. தேவலோக அப்சரஸ் ஆன ரம்பை, இந்திரனின் சாபத்தால் பகல் நேரங்களில் பூமியில் சிலையாக நிற்கவும், இரவு நேரங்களிலோ மீண்டும் உயிர் பெற்றவளாக இந்திரலோகம் செல்வதுமாக இருப்பாள்.
பகல் நேரத்துப் பதுமையாக நிற்கும் அவளின் கழுத்தில் நாயகன் சாரங்கபாணி மாலையிட, ரம்பை அவன் மீது காதல் கொண்டு இரவில் தன்னுடன் இந்திர லோகத்துக்கு அழைத்துச் செல்வாள். 1939ல் வெளியான இப்படம், அந்த ஆண்டு வெளிவந்த 35 படங்களில் மூன்று சிறந்த படங்களில் ஒன்றாக இன்றளவும் குறிப்பிடப்படுகிறது என சினிமா ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்சரஸ் போன்ற தோற்றத்தில் இருந்த வசந்தா அதன் முக்கிய காரணியாக இருந்துள்ளார்.
இந்த ரம்பை ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாகவே மறுபடியும் ரம்பையின் பெயரால் அடுத்த ஆண்டிலேயே அதே இயக்குநர் பி.என்.ராவ், அதே ரம்பையை போன்ற நாயகி வசந்தாவையே கதாநாயகியாக்கி ‘பூலோக ரம்பை’யை வெளியிட்டார். முழுக்க முழுக்க மந்திரவாதி, மந்திர தந்திரங்கள், கதாநாயகியை கவர்ந்து சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தல் என பலவித மசாலாக்கள் இருந்தும் படம் ஓடாமல் நமத்துப் போன பப்படமானது.
ஜெமினியிலிருந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நோக்கி…
வாசன் தயாரித்த முதல் படமான ‘மதன காமராஜன்’ அளித்த வெற்றியை அடுத்து தொடர்ந்து படங்களை தயாரிக்கவும் அவரை ஊக்குவித்தது. அடுத்த தயாரிப்பான ‘நந்தனார்’ படத்திலும் தங்கள் நிறுவன ஒப்பந்த நடிகையான வசந்தாவையே நடிக்கவும் வைத்தவர், தன் அடுத்த பிரமாண்டத் தயாரிப்பான ‘சந்திரலேகா’ படத்துக்கும் அவரே நாயகி என்றும் அறிவித்தவர், பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொள்ளவும் செய்தார். பின்னர் ‘ஜெமினி சாம்ராஜ்யத்தின் மகாராணி’ என பலராலும் பேசப்பட்ட புஷ்பவல்லியும் அவ்வாறே நாயகியாக முடிவு செய்யப்பட்டு, பின்னர் அவருடைய கணவர் ரங்காச்சாரியின் விருப்பமின்மையாலும் தலையீடுகளாலும் விலக நேர்ந்தது.
இவர்களுக்குப் பின் நாயகியாக முடிவு செய்யப்பட்டு, ‘சந்திரலேகா’வாக இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் டி.ஆர்.ராஜகுமாரி. அடுத்தடுத்த தலைமுறைகளையும் தன் நடிப்பாலும் அழகாலும் வசீகரித்தவர் அவர். இப்படம் பற்றிய விளம்பரங்களில் ‘கான மயில்’ என வாசன் வர்ணித்த வசந்தாவை அவரே பின்னர் நீக்கியதுதான் நகை முரண். அதன் பிறகும் ஜெமினியின் ஒப்பந்த நடிகையாகத் தொடர விரும்பாத வசந்தா, மற்றொரு பெரிய நிறுவனமான ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ அதிபர் டி.ஆர். சுந்தரத்தின் அழைப்பை ஏற்று சென்னையிலிருந்து சேலம் போய்ச் சேர்ந்தார்.
பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவான போர் பிரச்சார படங்கள்
வசந்தா அடுத்து நாயகியாக நடித்து, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து, எம்.எல்.டான்டன் இயக்கிய ‘ராஜ ராஜேஸ்வரி’ அடுத்து அவரது வெற்றிப் படம் மட்டுமல்ல, சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்தது.
இரண்டாம் உலகப்போரை பிரிட்டிஷ் அரசு ஆதரித்ததுடன் போரிலும் பங்கேற்றது. அதை ஆதரித்து பிரச்சார படங்கள் தயாரிக்க வேண்டுமென்றும் படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்தது. அதை ஏற்றுப் போரை மையப்படுத்தி, புராண, இதிகாசக் கதைகளை சற்றே ஓரம் கட்டி சம காலத்தில் நிகழ்வதான சமூகக் கதைகள் எழுதப்பட்டு, மூன்று பெரிய நிறுவனங்களால் நான்கு படங்கள் எடுக்கப்பட்டன. முன்னோடி இயக்குனர் கே.சுப்பிரமணியம் ‘மான ரட்சணம்’ என்ற படத்தையும், ஜெமினி நிறுவனம் ‘கண்ணம்மா என் காதலி’யையும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் தன் பங்காக ‘பர்மா ராணி’யை தயாரித்து வெளியிட்டார்.
இந்த மூன்று படங்களுமே 1945 ஆம் ஆண்டில் வெளிவந்தன. ‘பர்மா ராணி’யாகப் படத்தில் தோன்றியவர் வசந்தா என்பதில் சந்தேகமேயில்லை. இயக்கம், தயாரிப்பு இவற்றுடன் ஜப்பான் ராணுவத் தளபதியாகவும் நடித்து நடிப்புப் பொறுப்பையும் ஏற்றார். படம் நன்றாக ஓடியதால் வசந்தாவும் கொண்டாடப்பட்டார். ஒரு வகையில் அவர் ‘சுந்தரத்தின் அதிர்ஷ்டம்’ என்றும் பலராலும் பாராட்டப்பட்டார். ஓராண்டு இடைவெளியில் மீண்டும் ‘சித்ரா’ படத்தையும் வெளியிட்டார்
சுந்தரம். போரைக் காரணமாக வைத்து கச்சா ஃபிலிம் தட்டுப்பாடும் ஏற்பட்டதால், வழக்கமான நீளத்தில் தயாரிக்கப்படும் படங்கள் குறைந்த நேரத்தில் ஓடும் அளவுக்குத் தயாராயின. மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்த பின், டி.ஆர். சுந்தரத்தின் வாழ்க்கையிலும் இணையாக மாறினார் வசந்தா. மாடர் தியேட்டர்ஸ் நிறுவனம் அவருக்குப் பெரு வாழ்வினை அளித்தது என்றும் குறிப்பிடலாம். ‘பர்மா ராணி’ வெற்றிக்குப் பின் ‘சுபத்ரா’விலும் சுந்தரம் கதாநாயகன் இந்திரஜித் வேடமேற்றார். ‘சுலோசனா’வில் பாரதிதாசன் வசனம் எழுதினார் என்பது மட்டுமே பேசப்பட்டது. இவ்விரு படங்களும் சுமாரான வெற்றியையே பெற்றன.
மாடர்ன் தியேட்டர்ஸ் அல்லாமல் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவின் தயாரிப்பாக வெளிவந்த, உண்மையிலேயே சகலகலாவல்லவராகக் கொண்டாடப்பட்ட ரஞ்சன் நாயகனாய் நடித்த ‘சாலிவாஹனன்’ படத்தில் நாயகனின் தங்கையாக நடித்திருந்தார் வசந்தா. அதுவே அவரது இறுதிப்படம் எனலாம். அதன் பின்னர் புதுப்புது நாயகிகள் ஏராளமாக, வண்ணமயமாகத் திரைக்களத்தில் இறங்கியதால், நாயகி வாய்ப்புகள் கைக்கெட்டாத தொலைவுக்குப் போயின. ‘இனி துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பதில் விருப்பமில்லை’ என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு, அவராகவே நடிப்புத் துறையிலிருந்து முற்றிலும் ஒதுங்கிக்கொண்டார் வசந்தா.
சுந்தரத்தின் மறைவுக்குப் பின் சென்னையில் குடியேறியவர், தயாரிப்பாளர் வாசுவுடன் இணைந்து வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது. வாய்பாட்டு, வீணை என இசைப்பள்ளி அமைத்து இசை சார்ந்து தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட குன்றக்குடி லட்சுமி வள்ளிக்கண்ணு என்ற கே.எல்.வி.வசந்தா 85 வயது வரை நெடுவாழ்வு வாழ்ந்து மறைந்தார். எல்லாவற்றுக்கும் ஒரு இறுதி உண்டு தானே…!
தொகுப்பு: பா.ஜீவசுந்தரி
