×

உங்க உள்ளுணர்வு சொல்வதை துணிவுடன் செய்யுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘எங்களுடைய குடும்ப பொருளாதாரம் திடீரென்று மோசமான சூழ்நிலைக்கு தள்ளிய போது நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற யோசனையில்தான் கேக் பிசினஸ் தொடங்கினோம்” என்று பேசத் துவங்கினார் திருப்பூரை சேர்ந்த விலாசினி.

‘‘எல்லோரையும் போல பேக்கரி என்பதற்கு மாறாக ‘விலாஸ் கேக் பொட்டிக்’ என்று பெயரை மாற்றினேன். அதுவே என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக மாறியது. எங்க வீட்டில் நான் ரொம்ப செல்லம், குடும்ப கஷ்டமே அறியாமல் வளர்ந்தேன். நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது வீட்டிலேயே பொழுதுபோக்காகத்தான் கேக் செய்து பார்ப்ேபன். நன்றாக இருப்பதாக வீட்டில் எல்லோரும் சொல்வாங்க. அதனால் நேரம் கிடைக்கும் போது நானே கேக்கை பேக் செய்வேன்.

ஒருநாள் நாங்க நினைத்தே பார்க்க முடியாத நிலைக்கு எங்களின் குடும்பம் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. குடும்பத்திற்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அந்த சமயத்தில் பொழுதுபோக்காக நான் செய்த கேக்தான் எனக்கு கை கொடுத்தது. வீட்டில் இருந்தபடியே கேக் பிசினஸை துவங்கினோம். ஆனால், ஆரம்பத்தில் நான் செய்த கேக் எதிர்பார்த்தது போல் வரவில்லை. இருக்கும் கஷ்டமான நிலையில் நான் பொருட்களை வாங்கி வீணாக்குவதாக அம்மா என்னை திட்டினார்கள். அந்த சமயத்தில் இன்று போல் சமூகவலைத்தளங்கள் எல்லாம் இல்லை.

இன்று ஒரு ரெசிபியின் பெயரை டைப் செய்தாலே பலர் செய்த செய்முறைகள் இணையத்தில் லிஸ்ட் செய்யப்படுகிறது. அன்று அப்படியான சூழல் இருக்கவில்லை. அதனால் ஆன்லைன் முறையில் பேக்கிங் பயிற்சியிைன மேற்கொண்டேன். அதில் கேக் பேக்கிங்கிற்கான அடிப்படை விஷயங்களை தெரிந்து கொண்டேன். அதை நானே செய்து பார்க்கும் போது சின்னச் சின்ன தவறுகள் ஏற்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்தேன். பலகட்ட சோதனைகளை கடந்து நான் முழுமையான பேக்கராக மாற ஒரு வருடமானது.

என் கல்லூரி விடுமுறை நாட்களில் நான் செய்த கேக்குகளை என் தோழிகள் மற்றும் அக்கம் பக்கம் குடியிருப்பவர்களுக்கும் கொடுத்தேன். அதை சாப்பிட்டு பல்வேறு கருத்துக்கள் சொன்னார்கள். நிறை குறைகள் சொன்ன போது அதை ஏற்று சில மாற்றங்கள் செய்தேன். மேலும், அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. முதன் முறையாக என் கல்லூரி விடுதியில் நான் தயாரித்த கேக்குகளை விற்பனை செய்தேன்.

அதன் மூலம் கிடைத்த வருமானத்தை என் செலவுக்குப் போக வீட்டுக்கும் கொடுத்தேன். கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ஆனால், அந்தக் காலத்தையே எனக்கான வாய்ப்பாக மாற்றிக் கொண்டேன். பலர் என்னிடம் தங்கள் குழந்தைகள் பிறந்தநாள், திருமணநாளுக்கு கேக்குகளை ஆர்டர் செய்தார்கள். வீட்டில் இருந்து செய்து கொண்டு ேபாய் கொடுத்தேன். என்னுடைய கேக்குகளில் அளவான சர்க்கரை, நல்ல தரமான வெண்ணெய் தான் பயன்படுத்துவேன்.

அதுவே என்னுடைய சக்சஸுக்கு காரணமாக மாறியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும்படி கொடுத்ததால், ஆர்டர்கள் வரத்துவங்கியது. என்னுடைய கேக்கினை சாப்பிட்டு வீட்டிலுள்ள பெரியவர்கள், ‘நான் அரை பீஸ்தான் சாப்பிடுவேன். ஆனால், உங்க கேக் ரெண்டு சாப்பிடுகிறேன், திகட்டவில்லை’ என்று சொல்லும் போது எனக்கு பெருமையாக இருந்தது. அதன் பிறகு ‘விலாஸ் கேக் பொட்டிக்’ என்ற பெயரில் இணையதளத்தில் நான் செய்த கேக்கினை பதிவிட செய்தேன். ஆன்லைனில் பார்த்து அதன் மூலமாகவும் ஆர்டர்களை கொடுக்க ஆரம்பித்தார்கள்’’ என்றவர் அவரின் சிக்னேச்சர் கேக் குறித்து பகிர்ந்தார்.

‘‘எனக்கு ரோஸ் மில்க் ரொம்ப பிடிக்கும். ஒரு புதிய முயற்சியாக ரோஸ் மில்க் கேக் மற்றும் ரோஸ் மில்க் பிரவுனியினை அறிமுகம் செய்தேன். அதுவே என்னுடைய அடையாளமாக மாறியது. ஆரம்பத்தில் நான் இந்தத் தொழிலுக்கு வந்த போது என்னிடம் முதலீடு செய்ய அதிக தெகை எல்லாம் இல்லை. அதனால் தேவையான பொருட்களை தவணை முறையில் வாங்கினேன். பிறகு வந்த வருமானத்தில் கடனை அடைத்தேன். இன்று பத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகளுக்கு கேக்குகள் தயாரித்துக் கொடுக்கிறேன். நல்ல வருமானம் கிடைக்கிறது.

வீட்டிலிருந்து ஒரு தொழில் செய்வது மட்டுமில்லாமல் அதனால் கிடைக்கும் பொருளாதார சுதந்திரமும் எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த சுதந்திரத்தை எல்லா பெண்களும் அனுபவிக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு பிடித்த தொழிலில் கடும் முயற்சியுடன் ஈடுபட்டால் கண்டிப்பாக அந்த இலக்கை அடைய முடியும். அதற்கு நானே ஒரு உதாரணம். கேக் தயாரித்து அதை தொழிலாக செய்ய வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு நான் பயிற்சியும் அளிக்கிறேன்.

இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கின்றேன். கேக்கில் சிலர் கஸ்டமைஸ் செய்ய தரச்சொல்லி கேட்பார்கள். அவர்களுக்கு ஏற்பவும் செய்து தருகிறேன். நான் இந்தத் ெதாழிலில் ஈடுபட்ட போது, ‘முதுகலை பட்டப்படிப்பு படித்துவிட்டு வேலைக்கு போகலாமே… கேக் செய்வது ஒரு வேலையா’ன்னு கேட்டாங்க. இன்று நான் இதில் எனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி இருப்பதை பிரமிப்புடன் பார்க்கிறார்கள்.

பெண்கள் இல்லத்தரசியாக இருப்பது தவறில்லை. அதே சமயம் வீட்டில் கிடைக்கும் நேரத்தினை தங்களுக்கு பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரு வருமானம் கிடைக்கும். சிறிய வருமானமாக இருந்தாலும் அது பல கோடிக்கு சமம். உங்களுக்கு என்ன தெரியுமோ அதையே வெற்றிப் பாதையாக மாற்றிக் கொள்ளலாம்’’ என்றார் விலாசினி.

தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்

 

Tags : Saffron ,Vilacini ,Tiruppur ,
× RELATED குழந்தைகளின் ஸ்க்ரீன் நேரத்தை குறைப்பதே எங்கள் குறிக்கோள்!