×

சந்தனக் காற்றே

நன்றி குங்குமம் தோழி

சந்தனம் மணக்குது..!”
“சந்தனக் காற்றே..!”
“அரைச்ச சந்தனம்..!”
“சாந்துப்பொட்டு,
சந்தனப்பொட்டு..!”
“சந்தனத் தென்றலை..!”

என, பக்தியிசை மற்றும் திரையிசையில் நீங்காத இடம்பிடித்துள்ள நறுமணம் மிக்க சந்தனத்துடன் போவோமா ஓர் ஊர்கோலம்..?!மிகவும் பழமையான அதேசமயம் மிகவும் விலையுயர்ந்த சாண்டல்-வுட் (Sandalwood) எனும் சந்தனத்தின் தாவரப்பெயர் Santalum album.தோன்றிய இடம்: இந்தியா. “நறுமணத்திற்கு முகவரி எதுவும் தேவையில்லை” என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் சந்தனம், அதன் மரக்கட்டையின் உட்பகுதியின் நிறத்தைப் பொருத்து, சிவப்பு, மஞ்சள், வெண்மை (Red sandal, Yellow sandal & White sandal) என மூன்று வகைப்படுகிறது. அதேபோல, இந்தியாவில் வளரும் Santalum album, ஆஸ்திரேலியாவில் உள்ள Santalum spicatum, ஹவாய் நாட்டில் காணப்படும் Santalum paniculatum, பசிபிக் நாடுகளில் வளரும் Santalum yasi என, உலகெங்கிலும் பல்வேறு விதமான சந்தன மரங்கள் உள்ளன என்றாலும், வெண் மஞ்சள் நிறத்தையும், மண் மணத்துடன் கூடிய அதீத நறுமணத்தையும் கொண்ட நமது ஊரின் சந்தனமே மிகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. உண்மையில் நமது சந்தனமே, ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேசிய வகைகளிலிருந்து கிடைக்கப்பெற்றதாகவும் கூறப்படுகிறது. நமது தெய்வ வழிபாடுகளில் முக்கியமான இடம்பெறும் பாரம்பரியம் மிக்க நம் சந்தனம், அனுக்கம், ஸ்ரீ கந்தம், கந்தா, கந்தசாரா, சந்தன், சந்தனா, சந்தன முட்டி, கலாபம், பத்ராஸ்ரீ என நமது பிற மாநிலங்களில் வழங்கப்படுகிறது. எரிக்கப் பயன்படும் வாசனை மரம் என்பதே இதன் உண்மையான பொருளாகும்.

வைரம் பாய்ந்த சந்தன மரங்களின் உலர்ந்த நடுக்கட்டைதான் நறுமணம் மிக்கவையாகும். பொதுவாக காடுகளில் தாமே வளரக்கூடிய இம்மரங்கள், அவற்றின் விலை மதிப்பின் காரணமாக, அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட மரங்களாக விளங்குகின்றன. அமைதியானதொரு நறுமணத்தைத் தருவது மட்டுமன்றி பல மருத்துவ குணங்களையும் அள்ளித் தரும் சந்தனத்தை மேல்பூச்சாகவும் பயன்படுத்தலாம்; அரைத்து நீரில் கலந்தும் பருகலாம், வாசனை மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

லேசான துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட சந்தனத்தில் சாண்ட்டைல் அசிடேட் (Santyl acetate), சாண்ட்டலீன் (Santalene), சாண்ட்டலால் (Alpha and Beta Santalol) ஆகிய எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் சந்தனத்தின் பிரத்யேக மணத்திற்கும், மருத்துவ குணங்களுக்கும் காரணமாக விளங்குகின்றன. இவற்றில், சாண்ட்டலால் அளவைப் பொருத்துதான் சந்தன மரம், வாசனை திரவியம் தயாரிக்க அல்லது வெறும் மரமாகப் பார்க்கப்படுகிறது.சிறந்த கிருமிநாசினியான சந்தனம், தோல் அழற்சி, பருக்கள், கரும்புள்ளிகள், வெட்டு, சிரங்கு, ஆழமான வடுக்கள், தழும்புகள் ஆகியவற்றில் மேல்பூச்சாகப் பயன்படுகிறது. சருமத்தைப் பாதுகாப்பதுடன், நோயெதிர்ப்பையும் தருவதால்தான், மொட்டை அடித்த பின் குளிர்ச்சியான சந்தனத்தை தலையில் பொதுவாகப் பூசுகின்றனர் என்பதும் நமக்கு விளங்குகிறது. சருமத்தை மென்மையாக்கி, சுருக்கங்களையும் குறைக்க உதவும் சந்தனம், தோல் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், காய்ச்சல் மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு, நெற்றியில் இடப்படும் சந்தனப்பற்று அருமருந்தாக உள்ளது. வலி நிவாரணியாக விளங்கும் சந்தனம், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஞாபகத்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

பாலுணர்வை தூண்டவும் செய்கிறது.சந்தனத்தை அரைத்து நீரில் கலந்து பருகினால், ரத்தத்தை தூய்மை செய்து, உடலை குளுமையாக்கி, மனதை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் என்கிறது ஆயுர்வேதம். அத்துடன், செல்களின் வீக்கத்தைக் குறைக்கவும், சிறுநீர்ப் பெருக்கியாகவும் சந்தனம் பயனளிக்கிறது. சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதியில் சந்தன எண்ணெய் பெறப்படுகிறது. அகர் என்ற சந்தன எண்ணெய் (Sandalwood oil) மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதிலிருந்து, வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. அரோமாதெரபியில் சந்தன எண்ணெய் மன அழுத்தம், தூக்கமின்மை, பதட்டநிலை ஆகியவற்றைக் குறைத்து, மன அமைதியை கூட்டுகிறது. சரும வியாதிகளை போக்கவும், பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் போன்ற வாத வியாதிகளுக்கு வெளிப்பூச்சு எண்ணெயாகவும் சமயங்களில் உள்மருந்தாகவும், சந்தன எண்ணெய் பயன் தருகிறது. என்றாலும், மேல்பூச்சாக அல்லது பருகப்படும்போது சந்தனம் ஒருசிலருக்கு ஒவ்வாமை மற்றும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும்.

வாசனை திரவியம், முகப்பூச்சு, நறுமண எண்ணெய், சோப், ஊதுவத்தி, அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம் சாராத பகுதிகளிலும் சந்தனம் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இதில் குறிப்பாக, வாசனை திரவியமாக, சந்தனம் பெரிதும் கொண்டாடப்படுகிறது.மெசபடோமியாவில் தப்பூத்தி (Tapputi) என்ற பெண், சிப்ரஸ், பால்சம் போன்ற பூக்கள் கொண்டு தயாரித்த வாசனை எண்ணெய்தான் உலகின் முதல் வாசனை திரவியம் எனப்படுகிறது. ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, தமிழர்களின் முதல் வாசனை திரவியமாகத் திகழும் சந்தனத்தை,“வெந்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்பொற் செந்திருவருளும்” என்று பதார்த்த குணபாடமும்,“அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது” என்று நறுந்தொகையும் குறிப்பிடுகின்றன. இன்றுவரை பக்தியிசை மற்றும் திரையிசைகளில் சந்தனம் நீங்காத இடத்தையும் பெற்று வருகிறது.

வேத நூல்கள் மற்றும் புராணங்களில், முக்கியமான மங்கலப்பொருளாக சந்தனம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மகாலக்ஷ்மி வாசம் செய்யும் இடம் என்றும், சிவனுக்குரிய பூஜைப்பொருள் என்றும், முருகப்பெருமானை குளிர்விக்கும் சாதனமாகவும் சந்தனம் அறியப்படுகிறது. அபிஷேகத்திற்கும், அலங்காரத்திற்கும் இறைவனுக்குரிய முக்கிய பூஜைப்பொருளாக சந்தனம் விளங்குகிறது. கேரளாவில், பிற மூலிகைகளுடன் சேர்த்து, ஜவ்வாது, கலாபம், கணுக்கம் என பலவிதமாக சந்தனம் பயன்படுத்தப்படுகிறது.

புத்த மற்றும் ஜெயின் மதத்தினரும் சந்தனத்தை இறைவனிடம் சேர்க்கும் உன்னதப் பொருளாகக் கருதுகின்றனர். சூஃபி துறவிகளின் கல்லறையில் சந்தனம் பூசப்படுகிறது. தீய சக்திகளிடமிருந்து காக்கவும், இறையருளைப் பெறவும் பயன்படுத்தப்படும் சந்தனம், மறுபிறப்பை தடுக்கும் எனவும் இங்கு நம்பப்படுகிறது. வாழ்விற்கான மரமாக சந்தன மரத்தை (Tree of Life) கொரியாவின் ஷமான்கள் கருதுகின்றனர். எகிப்தியர்கள் நறுமணத்திற்காகவும், மருத்துவ குணத்திற்காகவும், மம்மீக்களை பதனிடவும் சந்தனத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழக காடுகளில் அதிகம் விளையும் சந்தன மரங்கள், சமீப காலமாக, ஹரியானா மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களிலும் பயிரிடப்படுகின்றன. உண்மையில், 40-50 வருடங்கள் வளர்ந்த சந்தன மரங்கள்தான் நறுமணத்தைத் தரும் சந்தனக் கட்டைகளை அளிக்கின்றன. விதைகள் மூலம் வளரும் இந்த அடர்பச்சை இலைகள் மற்றும் சிறு பூக்கள் கொண்ட சந்தன மரங்கள், அவற்றின் விலை மதிப்பு காரணமாக எளிதில் கடத்தப்படும் மரங்களாக உள்ளன. அழியும் அபாயத்தைத் தடுக்கும் வழிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது.நறுமணம் என்பது மனதிற்கு, காற்று தருகின்ற அழுத்தமான முத்திரை. சந்தனம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் எனலாம். பல்லாயிரக்கணக்கான நறுமணங்கள் இருந்த போதிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் பயணிக்கும் நம் அமைதியான, குளிர்ச்சியான, தனித்துவம் மிக்க சந்தனத்துடன் இனிதாகட்டும் இந்த நாள்..!

(இயற்கை பயணம் நீளும்…)

தொகுப்பு: டாக்டர் சசித்ரா தாமோதரன்

 

Tags : Sandanam Manakku ,AARACHSA SANDANAM ,Chanthupottu ,Sandanaphotu ,SANDANATH THENRALAI ,
× RELATED குழந்தைகளின் ஸ்க்ரீன் நேரத்தை குறைப்பதே எங்கள் குறிக்கோள்!