- ஷெர்லி கோயில்
- இந்தியா
- ஷெர்லி ஜேன் கோயில்
- நன்றி கூறுதல்
- ஷெர்லி டெம்பில் பிளேக்
- ஹாலிவுட்
- அமெரிக்க ஜனாதிப
நன்றி குங்குமம் தோழி
ஷெர்லி டெம்பிள் பிளேக் என அறியப்பட்ட ஷெர்லி ஜேன் டெம்பிள் ஹாலிவுட்டில் 1934 முதல் 1938 வரை உலகமே கொண்டாடி மகிழும் குழந்தை நட்சத்திரமாக பல பாக்ஸ் ஆபீஸ் திரைப்படங்களில் நடித்தவர். அப்போதைய அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்; அவரை விடவும் அதிகம் சம்பாதித்தவர் என்று ஷெர்லி பற்றி பெருமையாகக் குறிப்பிடுவார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே செல்வாக்குமிக்கவராகவும் திகழ்ந்தவர்; பின்னாட்களில் அமெரிக்க நடிகை, பாடகி, நாட்டியக் கலைஞர், அரசியல் பிரபலம் என பன்முகத்தன்மை வாய்ந்த ஹாலிவுட் பிரபலமாகவும் மிளிர்ந்தவர்.
அதே காலகட்டத்தில் தமிழ்ப்படஉலகில் தன் மழலை மாறாத தேனினும் இனிய குரலில் கொஞ்சும் மொழியில் அழகாகப் பாடி, ஆடி, நடித்து அன்றைய சென்னை ராஜதானி மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜப்பான் என எங்கெல்லாம் தமிழர்கள் நிரம்பியிருந்தார்களோ அங்கெல்லாம் மக்களை மகிழ்வித்தவர் தமிழின் முதல் குழந்தை நட்சத்திரமாக மிளிர்ந்த பேபி சரோஜா; இந்தியாவின் ஷெர்லி டெம்பிள் என்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் பெரிதும் கொண்டாடப்பட்டவர். 1930களின் காலகட்டத்தில் கிராமப்புறங்களில் தெருக்கூத்தும் சிறு நகரங்கள் தொடங்கி பெரு நகரங்கள் வரை நாடகங்களும் அதன் அடுத்தக்கட்டப் பாய்ச்சலாக வெகு மக்களை பெரிதும் ஈர்ப்பவையாகத் திரைப்படங்களும் கொண்டாடப்பட்டன. அப்போதைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களின் வரவும் மிகப் புதிதாகவே இருந்தது. அதனாலேயே முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு பெற்ற சுட்டிக் குழந்தையான பேபி சரோஜா மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவராகவும் கொண்டாடப்பட்டவராகவும் இருந்தார்.
சமூக இழிவுகளை சாடிய பாலயோகினி..!
தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநராகக் கொண்டாடப்படும் கே.சுப்பிரமணியம், பல புதுமைகளை திரையுலகில் பெரும் பாய்ச்சலாக நிகழ்த்திக் காட்டியவர். சமூக சீர்திருத்தங்களை தன் திரைப்படங்கள் வாயிலாகக் காத்திரமாகப் பேச முற்பட்டவர். அப்போதைய பெரும் நட்சத்திரங்களாக அறியப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜி. சுப்புலட்சுமி, எஸ்.வரலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி, பி.எஸ்.சரோஜா, பி.ஏ.பெரியநாயகி, லட்சுமி பிரபா, டி.வி.ரத்னம், பி.சரோஜா தேவி என பலரையும் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர். அவரின் பெருமைக்குரிய மற்றொரு அறிமுகம்தான் பேபி சரோஜா. ‘தமிழின் முதல் குழந்தைகள் சினிமா’ என்ற விளம்பரத்துடன் வெளியான படம் இது என்றாலும் படத்தின் கதைக்கரு குழந்தைகளுக்கானது என்று சொல்லி விட இயலாது. ஆனால், அக்காலத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கொடுமை குறித்துப் பேசியது. பார்ப்பனக் குடும்பங்களில் பால்ய பருவத்தில் நிகழ்த்தி வைக்கப்படும் திருமணங்களின் வாயிலாக ஏராளமான பெண் குழந்தைகள், பருவமடையும் முன்பாகவே கைம்பெண்களாகும் அவலம் சமூகம் எங்கனும் ஒரு தீரா நோயைப் போல பரவிக் கிடந்தது. கைம்பெண்களுக்கு மறுமணம் செய்து வைக்கும் பேச்சுக்கே அக்காலத்தில் இடமில்லை. ஒன்றுபட்ட வங்காளத்தில் ராஜா ராம்மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், தமிழ்நாட்டில் பெரியார் இன்ன பிறர் இத்தகைய இழிவுகள் களையப்பட்டு கைம்பெண் மறுமணங்கள் நிகழ்த்தப்பட வேண்டுமென்று பேசி வந்தாலும், சமூகத்தில் அத்தகைய மறுமலர்ச்சிகள் எளிதாக இங்கு நிறைவேற்றப்படவில்லை. இத்தகைய கைம்பெண்கள் நிலை என்பது சமூகத்தில் இல்லாமல் ஒழிய வேண்டும் என்பது குறித்துப் பேசுகின்ற படமாக ‘பால யோகினி’ திரைப்படம் சமூகத்துக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியமாகவே எடுக்கப்பட்டது. அத்துடன் சாதியத்தையும், மேல், கீழ், தீண்டாமை போன்ற அருவெறுக்கத்தக்க அத்தனை அவலங்களையும் சேர்த்தே சாடியது.
முழுவதும் குழந்தைகளை மட்டுமே நடிக்க வைக்க வேண்டுமென விரும்பியே இப்படத்தை எடுக்கத் துணிந்தார் கே.சுப்பிரமணியம். தன் சொந்த தம்பியின் (விஸ்வநாதன்) மகளான பேபி சரோஜாவை நடிப்பதற்குத் தேர்வு செய்தார். உடன் மற்றொரு குட்டி நட்சத்திரமாக பேபி ருக்மணியும் இணைந்து நடித்தார். பாபநாசம் சிவன் பாடல்கள் எழுத, பேபி சரோஜா பாடிய ‘ராதே தோழி’, ‘கண்ணே பாப்பா! முட்டாயி வாங்கித் தருவேனே’ பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக, ‘கண்ணே பாப்பா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பாடப்பட்டு வெகு பிரபலமடைந்தது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட இப்படத்தை மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட் கார்ப்பரேஷன் தயாரித்தது. தெலுங்கிலும் பேபி சரோஜாவே நடித்தார். பேபி ருக்மணிக்கு மாற்றாக பேபி எஸ்.வரலட்சுமி (இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன். யெஸ்…அந்தப் பாடலைப் பாடிய அவரேதான்). இவர்களுடன் மற்றொரு பாடகியான பால சரஸ்வதியும் நடித்துள்ளார்.ஜானகி என்ற இளம் கைம்பெண் வேடத்தில் நடிப்பதற்காக, சீதாலட்சுமி என்ற அதே போன்ற ஒரு கைம்பெண்ணையே தேர்வு செய்தார். அப்பெண் இயக்குநர் சுப்பிரமணியத்தின் சொந்த ஊரான பாபநாசம் பகுதியைச் சேர்ந்தவராகவும் இருந்ததால் பெரும் சிக்கல்களையும் அவர் சந்திக்க நேர்ந்தது. சொந்த ஊரில் சொந்த சாதியை விட்டு விலக்குவோம் என்பது வரை அவருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. மூன்றரை மணி நேரம் ஓடிய இப்படம் சமூகத்தில் சலசலப்பை ஏற்படுத்தவும் தவறவில்லை. அதுவே அக்காலத்தில் மிகப்பெரும் வெற்றிதான். 1937 ஆம் ஆண்டில் இவ்வளவு கனத்த விஷயம் பற்றி படம் எடுப்பதற்கும் மிகுந்த துணிச்சலும் வேண்டும்.
பெண் விடுதலையை பேசிய தியாகபூமி!
‘பாலயோகினி’ தந்த வெற்றியை அடுத்து கிடைத்ததோர் உன்னதமான வாய்ப்பு ‘தியாக பூமி’யில் அவர் ஏற்ற வேடம். படத்தின் கதாநாயகி எஸ்.டி.சுப்புலட்சுமி சாவித்திரி மற்றும் உமாராணி என இரண்டு மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்தார். அவருக்கு எந்தளவு வரவேற்பும் பாராட்டும் கிடைத்தனவோ, அதற்குச் சற்றும் குறையாமல் பேபி சரோஜாவுக்கும் பாராட்டுகளும் புகழ் மாலைகளும் கிடைத்தன என்றால் மிகையில்லை.
எஸ்.டி.சுப்புலட்சுமியின் மகளாக பேபி சரோஜா நடித்திருந்தார். கே.சுப்பிரமணியம் தன் இரண்டாவது மனைவியான எஸ்.டி. சுப்புலட்சுமியை கதாநாயகியாக்கி, அவருக்கு மகளாக பேபி சரோஜாவை நடிக்க வைத்ததால் சரோஜாவுக்கு எந்த பயமோ, சங்கோஜமோ இல்லாமல் நடிப்பதற்கும் எளிதாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. எளிய கிராமத்துப் பெண் சாவித்திரியை மணந்து கொள்ளும் பம்பாய் மாப்பிள்ளை ஸ்ரீ தரனுக்கு வரதட்சணை போதவில்லை என்ற குறைபாடு. பம்பாய்க்கு அவளை அழைத்துச் சென்றபோதும் ஒரு வேலைக்காரியை போலவே தாயும் மகனும் நடத்துகிறார்கள். கர்ப்பிணியான அவளை பிரசவத்துக்காகத் தனியாகவே பிறந்த வீட்டுக்கும் அனுப்புகிறார்கள். அதன் பின் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் அவள் மீண்டும் தன் முயற்சியால் பெரும் பணக்காரப் பெண்ணாக மாறுகிறாள். உமாராணி எனப் பெயரையும் மாற்றிக்கொண்டு சமூக சேவகியாக மாறுகிறாள். பம்பாயிலிருந்து வரும் கணவன் முன் வேறு யாரோ போல நடந்துகொள்கிறாள். தன் மனைவி சாவித்திரியே அவள் என்பதை உணர்ந்து கொள்ளும் கணவன் கோர்ட் படி ஏறுகிறான். தன்னுடன் அவள் சேர்ந்து வாழ வேண்டுமென வற்புறுத்துகிறான். ஆனால், உமா ராணியோ அதை முற்றிலும் நிராகரித்து, சேர்ந்து வாழ மறுப்பதுடன், அதற்கான நஷ்ட ஈடாக கணவனுக்கு ஜீவனாம்சம் தரவும் முன் வருகிறாள். இப்படியே கதை நகர்ந்து சென்று இறுதியில் தேச சேவையே இதற்கான மாற்று என்று இருவரும் ஆளுக்கொரு திசையில் கொடி பிடித்துக் கோஷமிட்டுச் செல்கிறார்கள். உமா ராணியின் மகள் சாருவாக பேபி சரோஜா பல காட்சிகளில் அத்தனை புத்திசாலிக் குழந்தையாக, சாதுர்யமாகப் பேசி பாடி, ஆடி நடித்து அனைவரையும் கொள்ளை கொள்கிறார்.
இப்படத்துக்கான கதையை எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. இக்கதை படமாக்கப்பட்டபோதே ‘ஆனந்த விகடன்’ வார இதழில் தொடர்கதையாகவும் வெளிவந்தது. வழக்கமாக தொடர்கதைகளுக்கு வாரந்தோறும் கதைக்கேற்றவாறு ஓவியங்கள் இடம் பெறுவதற்கு பதிலாக, திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள் பயன்படுத்தப்பட்டது அப்போது மிகவும் புதுமையான ஒன்றாகவும் பேசப்பட்டது. படம் வெளி வருவதற்கு முன்பாகவே வாசகர்களும் திரைப்பட ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கதையை வாரந்தோறும் வாசித்து அறிந்ததுடன், படம் எப்போது வெளியாகும் என்று அதீத ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஏனென்றால், அக்காலகட்டத்தில் மிகவும் புரட்சிகரமான கதையமைப்பை கொண்டதாகவும் இருந்ததால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் என்பதால், இப்படம் தடை செய்யப்படாமல் திரையிடப்படுமா என்ற எதிர்பார்ப்பும் மிகுந்திருந்தது. சாதியம், பெண்ணுரிமை, வரதட்சணை, சேரி என்றும் அக்ரஹாரம் என்றும் இரு பெரும் பிரிவுகளாக பிளவுபட்டிருந்த மக்களிடையே காந்தியத் தத்துவத்தின் மூலம் இறுக ஓர் பிணைப்பை ஏற்படுத்தும் கதாபாத்திரங்கள், அத்துடன் ஆங்கில அரசுக்கு எதிராகப் பேசப்படும் வசனங்கள், காட்சியமைப்புகள் என ஒரு பெருத்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களை படம் ஏமாற்றவில்லை. பேபி சரோஜாவும் தன் கற்கண்டுப் பேச்சும் பாடலுமாக உற்சாகப்படுத்தினார். பாபநாசம் சிவன் எழுதிய பாடலுக்கு குட்டி நட்சத்திரம் பேபி சரோஜா
‘கிருஷ்ணா நீ வேகமாய் வாடா…’ என்று பாடி ஆடும் காட்சியின் வெற்றியின் பின்னணியில் அவருடைய தாயார் அலமேலு விஸ்வநாதன் குரலும், பாபநாசம் சிவனின் பாடலும் இருந்தன. மற்றும் ‘சொல்லு காந்தி தாத்தாவுக்கு ஜே… ஜே…’ என சரோஜாவே பாடி ஆடியதும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. ஆங்கிலேய அரசு இப்படத்துக்கு தடை விதிப்பதற்கு முன்னதாகவே 22 வாரங்கள் ஓஹோவென்று ஓடியது. மக்கள் மீண்டும் மீண்டும் படத்தைக் காண திரையரங்குக்கு வந்தார்கள். ராஜாஜி தலைமையிலான ஆட்சியில் படம் தடையின்றி ஓடியது என்றும் குறிப்பிடலாம். பின்னர் இரண்டாம் உலகப் போரின் காரணமாக ராஜாஜி பதவி விலக நேர்ந்தது. மீண்டும் பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் கவர்னர் ஆட்சி நடைமுறைக்கு வரவே, படமும் தடை செய்யப்பட்டது. இவ்வாறு தடை விதிக்கப்படும் என்பதை அரசியல் சூழல்களின் மூலம் முன்பே அறிந்து கொண்ட கே.சுப்பிரமணியம், கெயிட்டி தியேட்டரின் கதவுகளை மக்களுக்காகத் திறந்து விட உத்தரவிட்டார். இடைவெளியின்றி காட்சிகளை தொடர்ந்து மக்களுக்காகத் திரையிடச் செய்தார். அந்த நேரத்தில் தடை உத்தரவு வருகிறது. ஆனால், படத்தைப் பாதியில் நிறுத்த மக்கள் திரள் சம்மதிக்க மறுக்கிறது. அதுவே திரையரங்கில் பெரும் அமளி ஏற்படவும் வழி வகுத்தது. போலீசார் உள்ளே புகுந்து தடியடி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதில் சில உயிர் பலிகளும் நிகழ்ந்தன என்பதும் சினிமா வரலாறு நமக்கு சொல்லும் செய்தி.
எங்கும் எதிலும் என விளம்பரத்திலும் முன்னணியில்…
பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘முத்து’ திரைப்படம் ஜப்பானிய ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதன் பிறகு ரஜினியின் படங்கள் ஜப்பானிய மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜப்பானில் அந்த ஓட்டம் ஓடியது. ஆனால், இதற்கெல்லாம் முன்னதாகவே பேபி சரோஜா ஜப்பானிய ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருந்தார். பேபி சரோஜா சிரிப்பது, ஆடுவது, பாடுவது போன்ற படங்கள் கலர் போஸ்ட் கார்டுகளாக ஜப்பானில் அச்சிடப்பட்டு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் பேபி சரோஜா ஜப்பானிலும் நன்கு அறியப்பட்ட நட்சத்திரமாக மாறினார். பேபி சரோஜாவைப் போன்ற சிறு சிறு பொம்மைகள் செய்யப்பட்டு அன்றைய நவராத்திரி கால கொலுப்படிகளில் அந்த பொம்மைகள் பல வீடுகளிலும் இடம் பெற்றுள்ளன என்றால் சரோஜாவின் புகழ் எந்தளவுக்குப் பெரும் வீச்சுடன் இருந்தது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
அக்காலகட்டத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கெல்லாம் சரோஜா என்றே பெயரிடப்பட்டது. கிராமம், நகரம் எங்கு பார்த்தாலும் சரோஜா என்ற ஒற்றைப் பெயர் கோலோச்சியது என்றால் அது சற்றும் மிகையில்லை. ஒருவேளை பெயர்ப் பஞ்சம் ஏதும் வந்துவிட்டதோ என்று கூட பிறர் நினைக்கும் அளவுக்கு சரோஜா என்ற பெயரே எங்கும் நிலவியது. அன்றைக்கு வீடுதோறும் சரோஜாக்கள் நிரம்பியிருந்தனர். எந்தப் பொருளிலும் சரோஜாவின் உருவம் அச்சிடப்பட்டு விற்பனையிலும் சரோஜாவின் முகம் எங்கெங்கும் பரவியது. பவுடர், சோப், தீப்பெட்டிகளின் லேபிள்களிலும் சரோஜாவே நீக்கமற இடம் பெற்றிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவே ஒரு வகையில் அச்சுறுத்தலாகவும், பின்னர் இடைஞ்சலாகவும் மாறியதால், குடும்பத்தார் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியதாயிற்று. எங்கள் அனுமதியின்றி எங்கள் குழந்தையின் படத்தை அச்சிடவோ, வெளியிடவோ கூடாது என்று தடை உத்தரவு பெற வேண்டியிருந்தது. அதன் பிறகே இந்த விளம்பரப் ‘பூச்சாண்டிகள்’ சற்றே ஓய ஆரம்பித்தன(ர்).
குடும்பத்தினர் ஒன்றிணைந்த குடும்பப் படம்
அடுத்து பேபி சரோஜாவுக்கு ஒரு மகிழ்ச்சியான திரைப்படம் அமைந்தது என்றும் குறிப்பிடலாம். பின்னே, அவருடைய தாயார் அலமேலு விஸ்வநாதன், தந்தையார் விஸ்வநாதன் இருவரும் பேபி சரோஜாவுடன் இணைந்து நடிக்க, 1941 ஆம் ஆண்டு வெளிவந்தது ‘காமதேனு’. கே.சுப்பிரமணியம் சமூகப் பிரச்னைகளை முன்னிறுத்தியே கதை, வசனம் எழுதினார். இப்படத்தை பிரபல இந்தித் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான நந்தலால் ஜஸ்வந்த்லால் இயக்கினார். முதலும் கடைசியுமாக இவர் இயக்கிய ஒரே படம் இது மட்டும்தான். ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்ததைப் போல் பெரிதாக ஓடவுமில்லை; பெயர் பெறவும் இல்லை. இந்தப் படம் பற்றி சொல்வதற்கான ஒரு தனிப்பட்ட செய்தி என்றால் தாய், தந்தை, மகள் மூவரும் அதே உறவு முறையில் நடித்ததுதான். பெற்றோர் இருவரும் தங்கள் சொந்தப் பெயர்களில் அல்லாமல், வத்ஸல், வத்ஸலா என்ற புனைப்பெயர்களில் நடித்தார்கள். பேபி சரோஜா மட்டுமே தன் சொந்தப் பெயருடன் நடித்துள்ளார். இப்படத்தைத் தயாரித்தவரும் விஸ்வநாதன்தான். காஸினோ, கெயிட்டி தியேட்டர்களை அடுத்து கூவம் ஆற்றுப் பாலத்தைக் கடந்து அக்கரையில் இருந்த ‘சித்ரா’ தியேட்டரின் உரிமையாளர் இவர். இப்போது அந்தத் தியேட்டர் இல்லை. 1931 ஆம் ஆண்டு ஜனவரி 28ல் பிறந்த இவரின் மகள் பேபி சரோஜா, பால யோகினி(1937), தியாக பூமி (1938), காமதேனு (1941) இந்த மூன்று படங்கள் தவிர வேறு படங்களில் நடிக்கவில்லை. மூன்றுமே இவர் குடும்பத்தாருடன் தொடர்புள்ள படங்கள். ஆனால், முன்னூறு படங்களில் நடித்தது போன்ற பேரும் புகழும் அவரைத் தேடி வந்தன. இந்தியாவின் ஷேர்லி டெம்பிள் என்று போற்றிப் புகழும் உன்னதமான நட்சத்திரமாகவும் அறியப்பட்டார். அவருக்குப் பின் எவ்வளவோ குழந்தை நட்சத்திரங்கள் உருவானார்கள். சிலர் உச்சம் தொட்ட நடிக, நடிகையராக உயர்ந்தார்கள். வேறு சிலரோ அந்த நிலையை அடைய முடியாவிட்டாலும், தங்கள் பதிவுகளை ஓரளவுக்கு உருவாக்கிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரிலும் பேபி சரோஜாவுக்கு என்று ஒரு தனித்த இடம் எப்போதும் உண்டு. திரைப்படங்களில் தொடர்ந்து அவர் நடிக்காதபோதும் இசை, நாட்டியம், ஓவியம், ஜப்பானிய காகித மடிப்புக்கலை என பல்வேறு கலை வடிவங்களையும் கற்றறிந்தவராகத் தன்னை மாற்றிக்கொண்டார். பேபி சரோஜா என்பது மாறி சரோஜா ராமாமிர்தம் என மும்பையில் பல காலம் வாழ்ந்தவர், 2019 ஆம் ஆண்டில் மறைந்தார். சாதனையாளர்களாக வாழ்ந்தவர்களின் புகழ் ஒருபோதும் மறைவதில்லை. அது காலம் கடந்தும் நிலை பெற்று நிற்கும்.
தொகுப்பு: பா.ஜீவசுந்தரி
