நீண்ட நாட்களாக பட்டா வழங்காததால் மூதாட்டி மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சி

 

புதுக்கோட்டை, ஜூன் 16: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் மூதாட்டி ஒருவர் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மனைவி சித்ரா (70). இவர் அப்பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த வீட்டிற்கான வீட்டு வரி ரசீது மற்றும் மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்தையும் அவர் முறையாகப் பெற்றுள்ளார். தான் வசிக்கும் வீட்டிற்குப் பட்டா வழங்கக் கோரி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகத்திடம் சித்ரா தொடர்ந்து மனு அளித்து வந்துள்ளார்.

ஆனால், இதுவரை அவரது மனு மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சித்ரா, நேற்று மீண்டும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயைத் தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், உடனடியாகப் மூதாட்டியைத் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்ட போலீசார், தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்துவதற்காக அவரை திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலிலேயே மூதாட்டி தீக்குளிக்க முயன்ற இந்தச் சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

Related Stories: