திண்டுக்கல் பகுதியில் சாலைகளில் அதிகம் சுற்றும் மாடுகளால் விபத்து அபாயம்: அதிகாரிகளின் நடவடிக்கை அவசியம்

 

திண்டுக்கல், ஜூன் 15: திண்டுக்கல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் முக்கிய சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். திண்டுக்கல்லில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள நகராமாக இருக்கிறது. இந்நிலையில் இந்நகரின் பழநி சாலை, வத்தலக்குண்டு சாலை, மதுரை சாலை உட்பட முக்கிய சாலைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதுபோன்ற சாலைகளில் கால்நடைகள் பெருமளவில் நடமாடுவதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக படுத்து உறங்கும் மாடுகள் கண்ணுக்கு தெரியாததால், டூவீலரில் வருவோர் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து காயமடைகின்றனர்.

மாடுகள் வளர்ப்போர் அதற்கான தீவனத்தை வாங்கி போடாமல், சாலைகளில் மேய்ச்சலுக்கு அனுப்பி விடுகின்றனர். சாலைகள் மட்டுமின்றி, தெருக்களிலும் இவை அதிக எண்ணிக்கையில் வலம் வருகின்றன. இப்பகுதிகளில் மாநகராட்சி தரப்பில் அடிக்கடி ஆய்வு பணிகள்நடத்தி, இதுபோல் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும் மாடுகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து சாலைகளில் அவற்றை உலாவ விடுகின்றனர். சமீப காலமாக கால்நடைகளை கண்காணித்து அபராதம் விதிப்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.

இதனால் விபத்துக்களும் குறைவின்றி தொடர்கின்றன. இந்த விபத்துகளில் சிக்குவோர் காயமடைவதால், அதுகுறித்த செய்திகள் வெளியே வரமல் போகிறது. எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிப்பதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

Related Stories: