திருமலை: ஆந்திராவில் வரும் 22ம் தேதிக்கு பிறகுதான் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே உள்ளது. வார விடுமுறை நாட்களான கடந்த 2 நாட்களாக பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்தது.
பைக், கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமின்றி திருமலைக்கு வரும் பஸ்களிலும் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் நிரம்பியிருந்தனர். ஏழுமலையானை நேற்றுமுன்தினம் 92,830 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 48,987 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.60 கோடி காணிக்கை செலுத்தினர். 4.64 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 3.37 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்றைய காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியது. இதனால் பக்தர்கள் கோகர்பம் அணை வரை சுமார் 4 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணிநேரம் முதல் 30 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமியை தரிசிக்க உள்ளனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணிநேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 7 மணிநேரத்திலும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
