மும்பை: வாகனங்களில் 100% எத்தனால் (E100) எரிபொருள் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்குவதற்கான விதிமுறைகள் அடங்கிய கோப்பில் ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் கட்கரி இந்த முக்கிய முடிவை அறிவித்தார். நாட்டில் 100% எத்தனாலை வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவதில் இருந்த சட்டப் பூர்வ தடைகள் நீக்கப்பட்டு, புதிய விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியா ஆண்டுதோறும் பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதிக்காக சுமார் 22 லட்சம் கோடி ரூபாய் செலவிடுவதாகவும், எத்தனால் பயன்பாட்டின் மூலம் இந்த பெருந்தொகையை மிச்சப்படுத்தலாம் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
“நான் முதல்முறையாக 100% எத்தனால் எரிபொருள் குறித்துப் பேசியபோது மக்கள் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். எனது சொந்த நண்பர்கள் சிலர் கூட இந்த யோசனையை விமர்சித்தனர். ஆனால், இன்று அந்த கோப்பில் கையெழுத்திட்டதன் மூலம், அந்த கனவை நான் சட்டப்பூர்வமாக நனவாக்கியுள்ளேன்,” என அமைச்சர் நிதின் கட்கரி இந்த நிகழ்ச்சியில் தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
