×

ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்: ஸ்லோவாக்கியா நாட்டிற்கும் செல்கிறார்

புதுடெல்லி: “ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். மேலும் ஸ்லோவாக்கியா பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்லோவாக்கியா குடியரசின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆகியோரது அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நேற்று முதல் வரும் 18ம் தேதி வரை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி முதற்கட்டமாகப் பிரான்சின் நீஸ் நகருக்குச் சென்று, அங்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து இருதரப்பு உறவுகளின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த உள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான கண்டுபிடிப்பு ஆண்டைக் கொண்டாடும் விதமாக, இன்று பாரத் இன்னோவேட்ஸ் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை இருவரும் இணைந்து தொடங்கி வைக்க உள்ளார்.

இந்தத் தனித்துவமான தளம் இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சர்வதேச முதலீட்டாளர்களுடன் நேரடியாக இணைப்பதுடன், நாட்டின் உயர்கல்வித் துறையில் இருந்து உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் ஒரு முக்கிய ஊக்கியாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் நிகழ்வுகளைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை பிரதமர் மோடி ஸ்லோவாக்கியா குடியரசிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு ஸ்லோவாக்கியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறையாகும். தலைநகர் பிராதிஸ்லாவாவில் ஸ்லோவாக்கியா அதிபர் பெல்லெக்ரினி மற்றும் பிரதமர் ஃபிகோ ஆகியோரைச் சந்தித்துப் பேசும் பிரதமர், அந்நாட்டின் முன்னணி வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினரான ஸ்லோவாக்கியாவுடனான இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை, இந்தியா – ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என நம்பப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரான்ஸ் எவியன் நகரில் நடைபெறும் 52வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இந்தியா தொடர்ந்து 8வது முறையாக இம்மாநாட்டிற்கு அழைக்கப்படுவது உலக அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் காட்டுகிறது. இம்மாநாட்டில் வளரும் நாடுகளின் குரலாக இந்தியா ஒலிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தின் இறுதிப் பகுதி ஜூன் 18 அன்று பாரிஸில் நடைபெறும் விவாடெக் 2026 தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், அங்கு அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இந்திய அரங்கைத் திறந்து வைத்து, பிரான்ஸில் வாழும் இந்திய வம்சாவளியினரையும் நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: இந்தியாவின் தொலைநோக்கு பார்வையில் பிரான்ஸ் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்திருந்தபோது, இரு நாடுகளுடனான நட்புறவை உலகளவில் உத்திசார் ஒத்துழைப்புக்கான சிறப்பு நிலைக்கு உயர்த்தி உள்ளது. நீஸ் நகரில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து, பாரத் இன்னோவேட்ஸ் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளேன்.  இது இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு என்பதன் பின்னணியில் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்ச்சி, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய புத்தொழில் நிறுவனங்களை சர்வதேச அளவிலான முதலீடுகளுடன் இணைப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவின் உயர் கல்வி சூழலிலிருந்து உருவாகும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இது ஒரு உந்து சக்தியாக அமையும்.  பிரான்ஸ் பயணத்தை முடித்து கொண்டு அரசு முறை பயணமாக ஸ்லோவாக்கியா நாட்டுக்கு செல்ல உள்ளேன். ஸ்லோவாக்கியாவிலிருந்து பிரான்சின் எவியன் நருக்கு சென்று, 16-17 ஆகிய தேதிகளில் அங்கு நடக்கும் ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறேன். ஜி7 உச்சி மாநாட்டில் இந்தியா தனக்காக மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் தெற்குலக நாடுகளின் விருப்பங்களுக்காகவும் நிச்சயம் குரல் கொடுக்கும்.

பிரான்ஸ் பயணத்தை ஜூன் 18ம் தேதி தலைநகர் பாரிசில் நிறைவு செய்கிறேன். அங்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து விவாடெக் 2026 மாநாட்டில் பங்கேற்கிறேன். விவாடெக் மாநாடு, ஐரோப்பிய நாடுகளின் தொழில்நுட்பம், புத்தாக்கத்தின் முதன்மையான கூட்டமைப்பு. விவாடெக் மாநாட்டில் இந்தியா அமைக்கவுள்ள மாபெரும் அரங்கு, இந்தியா, ஐரோப்பியா நாடுகளின் புத்தாக்க சூழல் அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு பொருத்தமான அடையாளமாக அமையும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

* டிரம்ப்பை சந்திக்கிறார் மோடி
பிரதமர் மோடியும், டிரம்பும் பிரான்சில் சந்திப்பார்கள் என வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. பபிரான்சில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டின் போது, ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னை குறித்து டிரம்ப் நட்பு நாடுகளுடன் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஒரு மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அங்கு அடுத்தடுத்து 3 இந்திய வணிக கப்பலை தகர்த்த அமெரிக்க படையின் தாக்குதல் குறித்து அப்போது பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 3 இந்தியர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags : PM Modi ,France ,G7 ,Slovakia ,New Delhi ,Modi ,President ,Emmanuel Macron ,Robert Figo… ,
× RELATED புற்றுநோய் மருந்து 50% விலை உயர்வு: விலை நிர்ணய ஆணையம் அறிவிப்பு