×

அபிஷேக் வீட்டில் திடீர் சோதனை: பூட்டை உடைத்து போலீசார் அதிரடி

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி வீட்டில் போலீசார் அதிகாலையில் அதிரடி சோதனை நடத்தினர். மேற்குவங்க சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்ற சில திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கையெழுத்து மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜியிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மாநில குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ஆசிரியர் நியமன ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக அவர் மீது ஏற்கனவே பலகட்ட விசாரணைகள் நடந்துள்ளது. இந்த தொடர் சட்ட நடவடிக்கைகளால் மேற்குவங்க அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.  இந்நிலையில், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் சல்போனி போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட புதிய வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு தேடப்பட்டு வரும் அபிஷேக் பானர்ஜியின் தனிப்பட்ட உதவியாளர் சுமித் ராயை தேடும் நோக்கத்தில் கொல்கத்தா காளிகாட்டில் உள்ள அபிஷேக் பானர்ஜி வீட்டுக்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் போலீசார் வந்தனர்.

ஒன்றிய அரசின் பாதுகாப்பு படையினருடன் வந்த போலீசார், கதவுகளை மீண்டும் மீண்டும் தட்டியும் எந்த பதிலும் கிடைக்காததால் சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக வெளியே காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் உள்ளே நுழைந்த அதிகாரிகள் சுமார் ஒன்றரை மணி நேரம் அங்கு சோதனை நடத்தினார்கள். காவல்துறையினரின் தகவலின்படி ராயின் கைபேசி கடைசியாக அபிஷேக் பானர்ஜியின் காளிகாட் இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகின்றது. இதற்காக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் சுமார் 7.30 மணியளவில் சோதனைகளை முடித்துக்கொண்டு போலீசார் திரும்பிச்சென்றனர். அபிஷேக் வீட்டில் சோதனை குறித்த தகவல் அறிந்த முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி உடனடியாக அங்கு விரைந்து வந்தார். சோதனை முடியும் வரை அங்கிருந்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் பானர்ஜி, ‘போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, ஒவ்வொரு அறையிலும் அத்துமீறி சோதனை நடத்தினார்கள்’ என்று கூறினார்.

Tags : Abhishek ,Kolkata ,Trinamool Congress ,General Secretary ,Abhishek Banerjee ,West Bengal Assembly elections ,
× RELATED புற்றுநோய் மருந்து 50% விலை உயர்வு: விலை நிர்ணய ஆணையம் அறிவிப்பு