புதுடெல்லி: உலகளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கார்போபிளாட்டின் மற்றும் சிஸ்பிளாட்டின் போன்ற ஊசி மருந்துகள் முதன்மை சிகிச்சையாக வழங்கப்படுகின்றன. இருப்பினும், இவற்றின் மூலப்பொருள் விலை மற்றும் உற்பத்திச் செலவு பன்மடங்கு உயர்ந்ததால், மருந்து நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்தன. இதனால் சந்தையில் உயிர் காக்கும் மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவியதோடு, நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்று வந்த சூழல் நிலவியது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திப்பதாகக் கூறி உற்பத்தியை நிறுத்தினால், பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்பதால் விலையை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் நேற்று நடத்திய 147வது கூட்டத்தில், குறிப்பிட்ட மருந்துகளின் உச்சவரம்பு விலையை 50 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 10 மி.கி கார்போபிளாட்டின் விலை 60.49 ரூபாயிலிருந்து 90.74 ரூபாயாகவும், 1 மி.கி சிஸ்பிளாட்டின் விலை 7.26 ரூபாயிலிருந்து 10.89 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, டெட்டனஸ் மற்றும் குழந்தைகளுக்கான பிசிஜி, தட்டம்மை உள்ளிட்ட தடுப்பூசிகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை 2013ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விலைகள் ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
