×

அயோத்தி ராமர்கோயில் நிதி முறைகேடு 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: உபி அரசு உத்தரவு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு புகார் தொடர்பாக 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க உபி அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் நன்கொடை மற்றும் காணிக்கை நிதியில் முறைகேடுகள் மற்றும் மோசடி நடந்துள்ளதாக அண்மையில் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளன.

கோயிலின் முன்னாள் கணக்குப்பிரிவு பொறுப்பாளர் மகிபால் சிங், 2021 முதல் கோயிலில் ரொக்கம் மற்றும் தங்க, வெள்ளி காணிக்கைகள் முறையான கணக்கின்றி திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த முறைகேடுகளை அதிகாரிகளிடம் தெரிவித்த மறுநாளே தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், கடந்த சில மாதங்களின் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியில் சுமார் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பாஜவைச் சேர்ந்த மருத்துவர் ரஜனீஷ் சிங் என்பவர் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மி, சிவசேனா போன்ற கட்சிகள் இந்த நிதி மோசடி குறித்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பாஜ முன்னாள் எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங், தனக்கு முறைகேடுகள் பற்றித் தெரியும் என்றும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் உண்மையைச் சொன்னால் தனக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து வழக்கமான தணிக்கை தற்போதும் நடந்து வருவதாகவும், இதுவரை எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அயோத்தி கோயில் நிதி முறைகேடு தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் அலுவலகம் இந்த விவகாரம் குறித்து முழுமையான அறிக்கை அளிக்குமாறு அறக்கட்டளையைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதையடுத்து இந்த நிதி முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உபி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சந்தேகத்தின் பேரில் ஊழியர்கள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்தக் குழுவில் லக்னோ பிரிவு ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் ஐஏஎஸ், காவல் துறைத் தலைவர் (ஐஜி) கிரண் எஸ் ஐபிஎஸ் மற்றும் நிதித் துறையின் சிறப்புச் செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Tags : Ayodhya Ram Temple ,UP Government ,Special Investigation ,Ayodhya ,Ayodhya Ram ,Temple ,Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust ,Uttar Pradesh ,
× RELATED புற்றுநோய் மருந்து 50% விலை உயர்வு: விலை நிர்ணய ஆணையம் அறிவிப்பு