- திருப்பலீஸ்வரர்
- சுவாமி
- பிரதோஷ
- திருவள்ளூர் மாவட்டம்
- திருப்பலீஸ்வரர் சுவாமி கோயில்
- திருப்பாலைவனம்
- ராஜேந்திர சோஜர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பழமையான திருக்கோயில்களில் ஒன்று திருப்பாலைவனம் என்ற ஊரில் அமைந்துள்ள திருப்பாலீஸ்வர சுவாமி திருக்கோயிலாகும். இத்திருக்கோயில், முதலாம் ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரியவருகிறது. அவர் தனது பெரும்படையுடன் வடபுலம் சென்று வெற்றிக்கொடி நாட்டி திரும்பியபோது, பாலை மரங்கள் நிறைந்திருந்த இப்பகுதியில் தங்கி ஓய்வெடுத்தார். அது சமயம் ஒரு பாலை மரத்தில் பிணிக்கப்பட்டிருந்த யானை மூர்ச்சையடைந்து விழுந்தது. அம்மரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக, மன்னனுக்குத் தோன்றவே, அவர் அம்மரத்தை வெட்டப்பணித்தார். கோடாரிபட்ட இடத்திலிருந்து குருதி வெளிப்பட்டது.
உடனே அரசர், அம்மரத்தை வெட்டுவதை நிறுத்தி அகழ்ந்து பார்த்தார். அப்போது தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட, லிங்க வடிவில் இருந்த இறைவனின் தலை மீது கோடாரிபட்ட இடத்தில் குருதி வெளிப்பட்டதை உணர்ந்து, மனம் பதைத்தும், பரவசம் கொண்டும், ஆனந்தமடைந்தார். உடனே கோயிலையும் எழுப்பி, ஆராதனைகள் செய்ய ஆணையிட்டார்.
அன்று அவனால் எழுப்பப்பட்ட கோயிலே தூங்கானை மாடமாக அமைந்த திருப்பாலீஸ்வரப் பெருமான் கருவறைக்கோயிலாகும். அம்மன்னரால், கோடாரி இடப்பட்ட தழும்பு இன்றும் காண முடிகிறது. இத்திருக்கோயிலில் அருள்மிகு திருப்பாலீஸ்வரப் பெருமானை வலமாக கொண்டு, அருள்மிகுலோகாம்பிகா தேவி சந்நதி அமைந்துள்ளது.
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை அமுதம் வேண்டிக் கடையத் தொடங்கிய நாள், அமாவாசை. ஆலகாலவிஷம் வெளிப்பட்ட நாள், அமாவாசைக்குப் பத்தாம் நாளாகிய தசமிதிதி. அமுதம் கிடைக்கப் பெற்ற நாள், பதினோராம் நாளாகிய ஏகாதசி. அசுரர்களைப் புறக்கணித்துத் தாங்கள் மட்டும் அமுதத்தை உண்ணுவதற்கு மறைவான இடம் தேடி தேவர்கள் அலைந்த நாள், பன்னிரண்டாம் நாளாகிய துவாதசி நாளாகும். அவர்கள் அமுதத்தை உண்ணுவதற்கு தேர்ந்தெடுத்த மறைவான இடம், இன்றைய திருப்பாலைவனம் பகுதியாகும். இறைவனைப் பூஜித்த நாள் திரயோதசி அதாவது பதிமூன்றாம் நாள் நேரம் மாலை 4.30 முதல் 6.30 மணி வரை சுக்லபட்சத்துப் பிரதோஷ காலம். அந்த நேரத்தில் நந்திதேவரின் தலை மீது நின்று சந்தியாத் தாண்டவம் எனும் நடனத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் காணுமாறு ஆடியதாகப் புராணம் புகழ்கின்றது.
இதன் படி பார்த்தால், முதன் முதலில் பிரதோஷ வழிபாடு தோன்றிய திருத்தலம் திருப்பாலைவனமே என்பது புலனாகிறது. எனவே, இத்திருத்தலத்தில் பிரதோஷ வழிபாட்டை நாம் செய்தோமானால், நமக்கு எல்லா நன்மைகளும் கைகூடும் என்பது திண்ணம். இத்தலத்தில், திருமணத் தடங்கல் உள்ளவர்கள் நேர்ந்து கொண்டால், திருமணம் கைகூடும் என்று சொல்லப்படுகிறது.
இங்கு அருளும் ‘கதவிற்கணபதி” வரப் பிரசாதியானவர். பல ஆண்டுகளுக்கு முன்பு, கோயிலின் திருக்கதவில் தீப்பற்றிக் கதவு முழுவதுமாக எரிந்ததாம். ஆனால், அதில் சிற்ப வடிவமாக இருந்த கணபதிக்கு ஒன்றும் நேரவில்லை. இதனால் இவருக்கு அந்தப் பெயர் நிலைத்துவிட்டது.
ஏதாவது தொலைத்துவிட்டு அது திரும்ப கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள், இந்த பிள்ளையாரை வழிபட்டு வேண்டிக்கொண்டால், அந்தப் பொருள் விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம். பொன்னேரியிலிருந்து திருப்பாலைவனம் கோயிலுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
பொன்னேரியில் இருந்து 11 கி.மீ. தூரத்தில் திருபாலைவனம் கோயில் உள்ளது.
