×

பழமையை பறைசாற்றும் தொன்மைமிக்க கல்வெட்டுக்கள் கோயில்!

நெய்வேலி ஒரு சிறிய ஊராகும் (நிலக்கரி கிடைக்கும் ஊர் அல்ல இது) இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் புதுக்கோட்டை நகருக்கு தென்மேற்கில் சுமார் 25கி.மீட்டர் தொலைவிலும், பொன்னமராவதிக்கு வடகிழக்கில் சுமார் 14.கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ள ஊராகும். இங்கே வேளாண்மையைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நெய்வேலி, வயல் சூழ்ந்த நிலப்பரப்பைக் கொண்டதாக அமைந்துள்ளதால், இங்குள்ள மக்களின் முக்கியத்தொழில் வேளாண்மையே ஆகும். வயலும் வயல் சூழ்ந்த நிலப் பரப்பையும் உடைய ஊரான இவ்வூருக்கு நெல்வேலி என பெயர் வழங்கப்பெற்று, நெய்வேலி என்ற பெயர் தற்போது வழங்கப்படுகிறது.
ஒரே பகுதியில் ஒரே பெயரில் இரண்டு அடுத்தடுத்து அமையும் போது ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபடுத்தி காட்டுவதற்காக திசை அடிப்படையில் கிழக்கு, மேற்கு அல்லது தெற்கு, வடக்கு என்று பாகுபடுத்தி மேற்கு – மேல் என்றும், கிழக்கு என்பதை கீழ் என்றும் முன் ஒட்டு சேர்க்கப்பட்டு புதுக்கோட்டை பகுதியில் மேல்மன நல்லூர், கீழ்மன நல்லூர், மேலத்தாணியம், கீழத்தாணியம், மேலப்பனையூர் – கீழப்பனையூர் என்ற பெயர்களில் புதுக்கோட்டைப் பகுதியில் ஊர்கள் வழங்கப்படுவது போல, இங்கும் மேல் நெல்வேலி, கீழ்நெல்வேலி என்ற ஊர்கள் ஏற்பட்டுள்ளது போல மேல்நெல்வேலி, மீளவேலி, கீழ்நெல்வேலி, நெய்வேலி என்றும் வழங்கி வருகின்றன.
நெய்வேலியில் ஊருக்கு வடபுறம் உள்ள ஊருணியின் வடகரையில் இடிந்து கிடக்கும் சிவன் கற்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இவ்வூரை கீழ்நெல்வேலி என்றே கூறுகின்றன. கருவறையின் மேல் விமானம் இல்லை. விமானத்திற்கு பதிலாகத்தான் நான் விமானமாக நிற்கிறேன் என்று சொல்வதுபோல பெரிய இச்சி மரம் நன்கு வளர்ந்த கிளைகளுடன் பச்சை பசேலென்று காட்சி தருகிறது.
இக்கோயில் இடிந்து சிதிலமடைந்ததை முன்னிட்டு, சில ஆண்டுகளுக்கு அருகிலுள்ள இதே ஊருணியின் மேலக் கரையில் செங்கல் கட்டுமானத்தில் ஒரு கோயிலை கட்டியெழுப்பி குடமுழுக்கு நடத்தினர்.
அதில் லிங்கத்தை மையமாகக்கொண்டு லிங்கம், அம்பாள், முருகன், மூலைப்பிள்ளையார், நந்தி, சேஷ்டாதேவி ஆகிய சிலைகளை வைத்து தெற்கு, வடக்கில் ஐந்து அறைகளை ஏற்படுத்தி லிங்கத்திற்கு இடப்புறத்து அறையில் அம்பாளும், சுப்பிரமணியரும், லிங்கத்திற்கு முன்பாக உள்ள மண்டபத்தில் தனி முருகனும் சேஷ்டாதேவியும் இருந்து அருள் பாலித்து வருகின்ற மாதிரி அமைத்தனர்.
இப்போது அந்த கோயிலில் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். பிரதோஷம், மஹாசிவராத்திரி போன்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சிவன் திருநாமம் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் அம்பாள் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறார்.
இடிந்து கிடக்கும் கற்கோயிலில் முப்படைக் குமுதப்பட்டையில் கங்கை கொண்டான் என்றும், கடாரங்கொண்டான் என்று போற்றப்படும் முதலாம் ராஜேந்திரனின் 10வது ஆட்சியாண்டு கல்வெட்டு முந்திய கல்வெட்டு உள்ளது.
அக்கல்வெட்டு, முதலாம் ராஜேந்திரனின் 10வது ஆட்சியாண்டில் ஆரூர்மாதேவடிகள் இக்கோயிலில் வழிபாட்டின் போது விளக்கு எரிப்பதற்கு நெல்வேலி வயல் விளக்கு புறமாக நிலக்கொடை வழங்கியதைத் தெரிவிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக, இடிந்த கற்கோயிலின் கருவறையிலுள்ள திருநிலைக்காலில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு நிஷதராயன் கொடுங்குன்றமுடையான் என்பவர், பசுமை வயலை சர்வ மானியமாக விட்டதை தெரிவிக்கின்றது. பசமை வயல் இன்றைக்கு விஷமுள்ளி வயல் என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலுள்ள ஜேஷ்டாதேவி சிலையின் ஒரு பகுதியிலுள்ள கல்வெட்டில் கொடும்பாளூர் செட்டிகளில் நிம்மகுச்சன் பெயர் காணப்படுவதால் இச்சிலையினை செய்து கொடுத்தவர் கொடும்பாளூர் நிம்மகுச்சன் எனக் கருதலாம்.
இக்கல்வெட்டு, கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நெய்வேலி ஊரின் மையத்திலுள்ள ஒரு தூண் கல்வெட்டு அச்சுததேவர் மகாராயன் காலத்தைச் சேர்ந்தது. அக்கல்வெட்டில் பொன்னமராவதி நாட்டு வடபற்று பனையூர் குளமங்கலம் உடையார் எனக்கண்டுள்ளது. பனையூர், சிவன்கோயிலின் சுவாமி கோயில் மண்டபத்தின் தெற்கு முப்பட்டைக் குமுதத்திலுள்ள வீரநரசிங்கராயரின் சகாத்தம் 1435க் கல்வெட்டொன்றில் பனையூர் அறிவீஸ்வரமுடையார் கோயில் கால சந்தி பூஜைக்கு நெய்வேலி எல்லைக்குட்பட்ட நிலம் கொடையாக கொடுப்பட்டதாகக் கூறுகிறது. நெய்வேலியில் நடப்பட்ட அச்சுதராயர் கல்வெட்டை மேலப்பனையூர் அறிவீஸ் முடையார்; கல்வெட்டு உறுதி செய்கிறது.

Tags : Neyveli ,Ponnamarawati ,Iwur Pudukkottai district ,Pudukkottai ,NORTHEAST ,
× RELATED அப்பம் விரும்பும் ஆனைமுகன்