×

மனப்பான்மையை விரிவுபடுத்துங்கள்!

ஒரு தவளை, தண்ணீர் நிரம்பிய ஒரு ஆழமான கிணற்றில் வாழ்ந்து வந்தது. அந்தக் கிணறே உலகிலேயே மிகச் சிறந்த இடம் என்று அது எண்ணியது. ஒரு நாள், வெளியுலகிலிருந்து வந்த மற்றொரு தவளை, அந்தக் கிணற்றின் அருகே வந்தது.
“நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கிணற்றுத் தவளை கேட்டது.
“நான் கடலிலிருந்து வருகிறேன்” என்றது, மற்றொரு தவளை.
“கடலா? அது எவ்வளவு பெரியது? என் கிணற்றைவிட இரண்டு மடங்கு பெரியதா?” என்று கேட்டது கிணற்றுத் தவளை.
“இல்லை, அதைவிட மிகவும் பெரியது” என்றது.
“அப்படியானால் பத்து மடங்கு பெரியதா?”
“அதையும்விட அளவிட முடியாத அளவுக்கு பெரியது” என்று பதிலளித்தது. கிணற்றுத் தவளை நம்பவே இல்லை. தன் சிறிய அனுபவத்திற்குள் மட்டுமே உலகை அளந்தது. கடலின் பரந்த தன்மையை அதன் மனம் ஏற்க மறுத்தது. இறுதியில்,
“என் கிணற்றைவிட பெரிய இடம் எதுவும் இருக்க முடியாது” என்று சொல்லி அங்கிருந்து சென்றுவிட்டது.
இந்தக் கதை நமக்குச் சொல்லும் பாடம் மிகவும் ஆழமானது. பல நேரங்களில் நாமும் அந்தக் கிணற்றுத் தவளை போலவே நடந்து கொள்கிறோம். நமக்குத் தெரிந்த சிறிய அனுபவங்களே முழு உலகம் என்று நினைக்கிறோம். நமது அறிவு, நமது கருத்து, நமது பார்வை மட்டுமே சரி என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையில், நாம் அறியாத உலகம் மிகவும் பரந்தது. மனிதனின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருப்பது அறியாமை அல்ல;
“எனக்கெல்லாம் தெரியும்” என்ற எண்ணமே ஆகும். கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் மனம் உயர்ந்துகொண்டே போகும். ஆனால் தன்னைத்தான் முழுமை என்று நினைக்கும் மனம் வளர்ச்சியை இழந்துவிடும். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முடியும். ஒரு குழந்தையிடமிருந்து தூய்மையான மனதை, ஒரு முதியவரிடமிருந்து அனுபவத்தை, ஒரு தோல்வியடைந்தவரிடமிருந்து வெற்றிக்கான பாடத்தை, ஒரு வெற்றியாளரிடமிருந்து முயற்சியின் மதிப்பை கற்றுக் கொள்ளலாம். தாழ்மையே அறிவின் கதவைத் திறக்கும் சாவி. அகந்தை அந்தக் கதவை மூடிவிடும். நம் பார்வையை விரிவுபடுத்திக் கொண்டே சென்றால், உலகம் எவ்வளவு பெரியது, தேவனுடைய செயல்கள் எவ்வளவு அற்புதமானவை என்பதை உணர முடியும். நம்முடைய கருத்துகளுக்கு மாறாக மற்றவர்களின் கருத்து களையும் கேட்கும் மனப்பான்மை இருக்க வேண்டும்.
ஏனெனில் உண்மை பல நேரங்களில் நமது எல்லைகளுக்கு வெளியே காத்திருக்கிறது. வாழ்க்கை என்பது வெறும் தெரிந்ததைப் பிடித்துக் கொள்வது அல்ல; தெரியாததை அறிய முயற்சிப்பதும்தான். ஆகையால், கிணற்றுத் தவளை போலக் குறுகிய மனப்பான்மையுடன் வாழாமல், கடலைப் பார்க்கும் மனதுடன் வாழ்வோம். புதிய அறிவை ஏற்றுக்கொள்வோம். புதிய அனுபவங்களை வரவேற்போம். தாழ்மையோடு கற்றுக்கொள்வோம். அப்போது வாழ்க்கை இன்னும் அர்த்தமுள்ளதாகவும் ஆசீர்வாதமாகவும் மாறும்.
“ஞானமுள்ளவன் கேட்டு அறிவில் பெருகுவான்; அதாவது புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்’’ (நீதி.1:5) என இறைவேதம் கூறுகிறது.
– அருள்முனைவர் பெ.பெவிஸ்டன்.

Tags :
× RELATED அப்பம் விரும்பும் ஆனைமுகன்