×

பொதுமக்கள் அதிக நடமாட்டமுள்ள சாலையில் சரிந்து விழும் நிலையில் மின்கம்பம்

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த பிரதான சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்று, தற்போது மிகவும் சேதமடைந்த நிலையில் காட்சியளிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மின்கம்பமானது பலத்த காற்று வீசும் போதோ அல்லது லேசான மழையின் போதோ எந்நேரமும் சரிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.

கம்பத்தின் அடிப்பகுதியிலும், மையப் பகுதியிலும் சிமெண்ட் காரைகள் முழுமையாகப் பெயர்ந்து, உட்புறம் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லும் பிரதான சாலை என்பதால், தினமும் அலுவலகப் பணியாளர்கள், வாகன ஓட்டிகள், மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் இந்த வழியாகத்தான் செல்கின்றனர்.

மின்கம்பம் பலவீனமடைந்துள்ளதால், கம்பிகள் அறுந்து விழுந்தாலோ அல்லது மின்கம்பமே சரிந்து சாலையில் விழுந்தாலோ பெரிய அளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த மின்கம்பத்தில் சில சிக்கல்கள் உள்ளதை நாங்கள் கவனித்துள்ளோம். ஆபத்து வரும் வரை காத்திருக்காமல், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.

ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன்பாக, மின்வாரியத் துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு, பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : KANNAMANGALAM ,
× RELATED விவசாயத்திற்கு எடுக்க அனுமதி பெற்று...