×

விவசாயத்திற்கு எடுக்க அனுமதி பெற்று வீட்டுமனை பிரிவுகளுக்கு ஏரிகளில் கனிம வளம் கொள்ளை

அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு; ஏரிகளின் பாதுகாப்பு, உறுதித் தன்மை இழக்கும் அபாயம்

செங்கம் : விவசாயத்திற்கு எடுக்க அனுமதி பெற்று வீட்டுமனை பிரிவுகளுக்கு ஏரிகளில் கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்கு உரிய அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஏரிகளில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, சிலர் அந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி வீட்டுமனை பிரிவுகளுக்கு முரம்புமண் கடத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

செங்கம் வட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுப்பணி மற்றும் வருவாய் துறை கிராம ஊராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட ஏரிகள் உள்ளது. தற்போது பருவமழை இன்றி கோடை வெயிலின் கடும் தாக்கத்தால் ஏரிகள் அனைத்தும் நீரின்றி வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.

கிராமப்புற விவசாயிகள் தங்களின் கால்நடைகளான ஆடு, மாடுகளை ஏரிகளின் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும் முடியாமல் பெரும் அளவில் விவசாயிகள் மட்டுமின்றி கால்நடைகளும் தவிப்புக்கு உள்ளாகிறது.

இந்நிலையில் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் மூலமாக விவசாய தேவைக்கு என முறைகேடாக வண்டல் மண் வேண்டும் என தவறான தகவலின் அடிப்படையில் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து முற்றிலும் வணிக நோக்கோடு வண்டல்மண், முரம்பு மண், செம்மண் என கனிம வள கொள்ளை என நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அரசு விதிகளுக்கு உட்பட்டும் கனிம வளங்களை முறையாக எடுப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அவர்கள் விருப்பம் போல் எந்த இடத்தில் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறதோ அங்கே ஜேசிபி பொக்லைன் டிப்பர் டாரஸ் வாகனங்களை அவர்கள் விருப்பத்திற்கு எடுத்துச் சென்று கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஏரிகளின் கரை பாதுகாப்பு தன்மை மற்றும் உறுதித் தன்மை இழக்கிறது. மேலும் மழை வெள்ளம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரிகளில் நீர் நிலை உயர்ந்தால் ஏரியின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. மிகப்பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும்.

செங்கம் வட்டத்தில் காஞ்சி, மேல்வணக்கம்பாடியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று, சிலர் அந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி வீட்டுமனை பிரிவுகளுக்கு முரம்புமண் கடத்தி வருவதாக பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வள திருட்டில் ஈடுபடுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கனிமவளத்துறை அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகளும், காவல்துறையும் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, கனிம வளக்கொள்ளையை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனிம வள கொள்ளையால் அரசுக்கு பல லட்சம் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமலும் இடைத்தரகர்கள் மூலமாக அதற்குரிய பங்காக ஒரு தொகையைப் பெற்றுக் கண்டு அலட்சியப் போக்கில் இருக்கின்றனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தொடர்ந்து இதே போல் நிலை ஏற்பட்டால் விவசாயிகள், விவசாயம் அமைப்பினர் இதனை தடுக்கும் விதமாக அடுத்த கட்ட போராட்டம் தொடங்குவோம் என விவசாய சங்கம் விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளது.

கனிம வளம் கொள்ளையின் பாதிப்பு

ஏரிகளில் வண்டல் மண், முரம்பு மண் அதிகளவு எடுப்பதால் ஏரியின் கரை உறுதிதன்மை இழந்து கரை உடையும் அபாயம் ஏற்படும். இதனால் விவசாய நிலங்கள் மலடாகின்றன. உரிய உரிமம் பெறாமல், அதிகபடியான கனிமங்கள் அள்ளப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனரக வாகனங்களில் கனிமங்கள் ஏற்றிச்செல்வதால் கிராமப்புற சாலைகள் கடுமையாக சேதமடைகின்றன. அதிக பாரத்துடன் இயங்கும் வாகனங்களால் சாலை விபத்துக்களும் அதிகரித்துகிறது.

ரியல் எஸ்டேட், சூளைகளுக்கு கடத்தல்

ஏரிகளில் அதிகளவு எடுக்கப்படும் வண்டல், முரம்பு மண் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரியல் எஸ்டேட், சூளைகள் மற்றும் வணிக வளாக கட்டுமானங்களுக்கு லாரிகள் மூலம் பெருமளவில் கடத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளன.

Tags : Tamil Nadu ,
× RELATED காலி மதுபாட்டிலுக்கு ரூ.10 அளிக்காத விற்பனையாளரின் மண்டை உடைப்பு