*கிலோ ரூ.55க்கு விற்பனை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை விவசாயமாக செய்யப்பட்ட பருத்தி விவசாயம் பருவம் முடிந்தது. இந்தாண்டு விளைச்சல் குறைவால் விலையும் குறைந்து காணப்படுவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல், மிளகாய்க்கு அடுத்தப்படியாக பருத்தி விவசாயம் செய்யப்படுகிறது.
மழை காலத்தில் மானாவாரி பயிராகவும், கோடையில் இறைவை பாசனத்தில் (போர்வெல், கிணறு) பருத்தி பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, நயினார்கோயில், கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி வட்டங்களில் சுமார் 25ஆயிரம் ஏக்கரில் பருத்தி விவசாயம் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்தாண்டு பருவக்காலம் மற்றும் கோடைக்காலத்தில் கடலாடி பகுதியில் மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், சிக்கல், இதம்பாடல், பி.கீரந்தை, மேலச்சிறுபோது, கீழச்சிறுபோது, கோகொண்டான், சடையனேரி, பூக்குளம், இளஞ்செம்பூர், சவேரியார்பட்டிணம், சவேரியார் சமுத்திரம், மாரந்தை உள்ளிட்ட பகுதிகள்.
முதுகுளத்தூர் பகுதியில் கீழத்தூவல், கீழகன்னிச்சோரி, சவேரியார்பட்டணம், கேளல், கொடுமலூர், தட்டனேந்தல், பெருங்கரணை, மீசல், மகிண்டி, காக்கூர், புளியங்குடி, கருமல் போன்ற பகுதிகள், உத்தரகோசமங்கை, களரி பகுதிகள், அபிராமம் மணிப்புரம் உள்ளிட்ட பகுதிகள், கமுதி அருகே பேரையூர் நெறிச்சிப்பட்டி, கோவிலாங்குளம் பகுதிகள் என மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்யப்பட்டது.
மழை காலத்தில் மிளகாயுடன் ஊடு பயிராகவும், ஒரு சில பகுதிகளில் முழுமையாகவும், அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் கோடை விவசாயமாக இரண்டாம் முறையாக பிரதான பயிராகவும் 135 நாட்களில் மகசூலை தரக்கூடிய எம்.சி.யு 7 ரக பருத்தி பரவலான பகுதியில் பயிரிடப்பட்டது.
இந்நிலையில் இரண்டு காலத்திலும் பறிக்கப்பட்ட பருத்தி கொட்டையிலிருந்து பஞ்சை எடுத்து விவசாயிகள் விற்று வருகின்றனர். ஆனால் இந்தாண்டு போதிய கோடை மழை இல்லாதது. பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் குறைந்தது. இதனால் நல்ல பருத்தி கிலோ ரூ. 55க்கும், இரண்டாம் ரக பருத்தி ரூ.40 முதல் 45 வரை விலை போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலக்கொடுமலூர் விவசாயிகள் கூறும்போது, கடந்தாண்டு மாவட்டத்தின் பிரதான பருவமழையான வடகிழக்கு பருவமழை வரும் செப்டம்பர், அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலம் கடந்து மழை பெய்தது.
இதுபோன்று கோடையிலும் போதிய மழை பெய்யவில்லை. இதனால் போர்வெல் சவறு தண்ணீரை பயன்படுத்தி விளைவிக்கப்பட்டதால் விளைச்சல் குறைந்தது. இந்தாண்டு பூச்சி தாக்குதலும் அதிகமாக இருந்தது. இதனால் மகசூல் குறைந்த நிலையில் தற்போது பருத்தி கொட்டையில் இருந்து வெடித்த பஞ்சு எடுக்கப்பட்டு வந்தது.
பருத்தி பயிரிடுதல், உரம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டது. தொடர்ந்து பஞ்சு எடுத்தல் பணிக்கு நாள் ஒன்றிற்கு 5 முதல் 10 பெண்கள் வருவர், அவர்களுக்கு கூலியாக ரூ.350 வரை வழங்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மழை காலத்தில் அறுவடை செய்யப்பட்ட பருத்தி ஏப்ரல், மே மாதங்களில் வரை ஒரு கிலோ பருத்தி ரூ.112 வரை விற்பனை ஆனது. கடந்தாண்டு ரூ.72க்கு வாங்கப்பட்டது. ஆனால் தற்போது நல்ல பருத்தி ரூ.55வரையிலும், இரண்டாம் ரக பருத்தி ரூ.40 முதல் 45 வரையிலும் விலை போகிறது என்றார்.
………..பாக்ஸ் செய்தி
பாசன வசதியில் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுபடியாகும் விலையில் விலை நிர்ணயம் செய்து, அரசு, பருத்தியை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யவேண்டும். சேமிப்பு கிடங்கு மூலம் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு இ.டெண்டர் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.
ஒன்றிய அரசு பருத்தி இறக்குமதி செய்வதை கைவிட்டு, உள்நாட்டு பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி விவசாயத்திற்கு கூடுதலான மானிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
