- FIFA உலகக் கோப்பை 2026
- மெக்ஸிக்கோ
- தென் கொரியா
- தென் ஆப்பிரிக்கா
- செ குடியரசு
- FIFA உலக கோப்பை
- ஃபிஃபா உலகக் கோப்பை…
மெக்சிகோ: பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணியை மெக்சிகோ அணியும், செக் குடியரசு அணியை தென் கொரியா அணியும் வென்றன. உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை தொடங்கியது. முதல் நாளில் 2 போட்டிகள் நடந்தன. மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குரூப் ‘ஏ’ பிரிவில் உள்ள மெக்சிகோ அணியும், தென் ஆப்பிரிக்க அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய 9வது நிமிடத்திலேயே மெக்சிகோவின் ஜூலியன் குய்னோனஸ் முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெறச்செய்தார். தென் ஆப்பிரிக்க கோல்கீப்பர் ரோன்வென் வில்லியம்ஸ் செய்த தவறான பாஸை பயன்படுத்தி மெக்சிகோ இந்த கோலை அடித்தது. இதனால் முதல் பாதியில் மெக்சிகோ 1-0 என முன்னிலையில் இருந்தது. இதனால் 2வது பாதி விறுவிறுப்புடன் காணப்பட்டது.
மெக்சிகோவின் நட்சத்திர வீரர் ரவுல் ஜிமினெஸ், 67வது நிமிடத்தில் தலையால் முட்டி அபாரமான கோல் அடித்து அசத்தினார். கடந்த 2020ல் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 9 மாதங்கள் ஓய்வில் இருந்த ஜிமினெஸின் இந்த கோல் மைதானத்தில் இருந்த ரசிகர்களை நெகிழச்செய்தது. இந்த கோலால் மெக்சிகோ அணி 2-0 என்ற முன்னிலை பெற்றது. அதன்பின்னர் 2 அணியினரும் கோல் அடிக்காததால் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியது.
தென் கொரியா வெற்றி: மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மற்றொரு தொடக்க ஆட்டம் நடந்தது. செக் குடியரசு அணிக்கு எதிரான இந்த குரூப் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் பின் தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்து 2-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியா வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே தென்கொரிய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
தொடர்ந்து 59வது நிமிடத்தில் செக் குடியரசு அணியின் கேப்டன் லாடிஸ்லாவ் கிரெய்ச்சி தலையால் முட்டி கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். இதற்கு தென்கொரியா அணி பதிலடி கொடுத்தது. ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் ஹவாங் இன்-பியோம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் செக் குடியரசுவின் டோமஸ் சௌசெக் அடித்த கோல் ‘ஆப் சைடு’ காரணமாக நடுவர்களால் மறுக்கப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பாக விளையாடிய தென்கொரியா அணி 80வது நிமிடத்தில் 2வது கோலை அடித்தது. அந்த அணியின் வீரர் ஹவாங் இன்-பியோம் பாஸ் செய்த பந்தை மாற்று வீரராகக் களமிறங்கிய ஓ ஹியோன்-கியூ கோலாக மாற்றினார். இதன் மூலம் தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிபா உலக கோப்பை குரூப் ‘ஏ’ பிரிவில் தென்கொரியா 3 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மெக்சிகோ அணி சிறந்த கோல் வித்தியாச அடிப்படையில் முதலிடத்திலும் உள்ளது.
* வரலாற்று கோல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த போட்டியில் 9வது நிமிடத்திலேயே மெக்சிகோ வீரர் ஜூலியன் அண்ட்ரே குவினோன்ஸ் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். இந்த கோலின் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் தொடக்க கோலை அடித்த முதல் கான்காகாப் பிராந்திய நாட்டு வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்து உள்ளார்.
* முதல் போட்டியிலேயே 3 ரெட் கார்டு
தென் ஆப்பிரிக்கா-மெக்சிகோ அணிகள் மோதிய ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் யா யா சிதோலே தனது முரட்டுத்தனமான ஆட்டத்தால் ‘ரெட் கார்டு’ பெற்று வெளியேறினார். அதேபோல அந்த அணியின் மற்றொரு வீரரான தெம்பா ஸ்வானேவும் ‘ரெட் கார்டு’ பெற்றார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 9 பேரை மட்டும் வைத்து விளையாடியது.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் மெக்சிகோ கேப்டன் சீசர் மாண்டெஸ்சும் ‘ரெட் கார்டு’ பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் மெக்சிகோ அணி 10 வீரர்களுடன் விளையாடியது. உலகக் கோப்பை வரலாற்றிலேயே ஒரே போட்டியில் 3 ‘ரெட் கார்டு’கள் வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். கடந்த 2022ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முழுவதுமே 64 போட்டிகளில் 4 ‘ரெட் கார்டு’கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
* தென் கொரியா வீரரின் சாதனை
தென் கொரியா-செக் குடியரசு அணிகள் மோதிய ஆட்டத்தில் 1 கோல் மற்றும் 1 அசிஸ்ட் செய்து தென் கொரியா வீரர் ஹவாங் இன்-பியோம் உலகக் கோப்பை வரலாற்றில் சாதனை படைத்தார். அவர் இந்த சாதனையை செய்யும் 3வது தென்கொரிய வீரர் ஆவார். இதற்கு முன்னதாக 1986ல் சோய் சூன்-ஹோ மற்றும் 1994ல் ஹாங் மியுங்-போ ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.
* 96 ஆண்டு கால ரெக்கார்டை முறியடித்த 17 வயது சிறுவன்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை கால்பந்து தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ அணியின் 17 வயது இளம் வீரர் கில்பர்டோ மோரா விளையாடியதன் மூலம் 96 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்துள்ளார். மெக்சிகோ அணிக்காக விளையாடிய மிகக் குறைந்த வயது வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார். ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் அவர் மாற்று வீரராகக் இறங்கினார்.
தற்போது 17 வயது 240 நாட்களே ஆகும் மோரா, இதற்கு முன்பாக 1930ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் மெக்சிகோவின் மானுவல் ரோசாஸ் (18 வயது 134 நாட்கள்) படைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். மெக்சிகோவின் சியாபாஸ் நகரில் பிறந்த மோரா, கிளப் டிஜுவானா அணியின் அகாடமி மூலம் அறிமுகமானார். உள்ளூர் லீக் போட்டிகளில் அந்த அணிக்காக 50க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி கோல் மற்றும் ‘அசிஸ்ட்’களை வழங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்மூலமே பயிற்சியாளர் ஜாவியர் அகுய்ரே, உலகக் கோப்பை அணியில் வாய்ப்பளித்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் மோரா கோல் அடித்தால் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு (17 வயது 239 நாட்கள்) அடுத்தபடியாக உலகக் கோப்பை வரலாற்றில் கோல் அடித்த 2வது மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.
